Ashwin's Biography
Ashwin's Biography

I Have the Streets: A Kutti Cricket Story! அஸ்வினின் அனுபவங்களைப் பேசும் புத்தகம்!

Published on

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கிரிக்கெட் அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாகி வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் உலக அளவில் பேசப்படும் வீரராக வளர்ந்து இருப்பது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

தொடக்க காலத்தில் அஸ்வின் ஒரு பேட்டராகவே இருந்துள்ளார். இவருடைய பயிற்சியாளர் அடிக்கடி சதம் விளாச சொல்லுவாராம். இதனாலேயே இவர் பந்துவீசத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது. பந்தை கையில் எடுத்தால் பலவித வேரியேஷன்களில் சுழற்றி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை பெற்றவர் அஸ்வின். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக சிறப்பாக பங்காற்றிய இவர், தனியாக ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

தனது யூடியூப் சேனலில் பல கிரிக்கெட் வீரர்களை பேட்டியெடுத்த வீடியோக்களையும், தனது கிரிக்கெட் அனுபவங்களையும், கிரிக்கெட் தொடர்கள் பற்றிய விமர்சனங்களையும் அவ்வப்போது வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டில் தான் சந்தித்த அனுபவங்கள், சவால்கள் மற்றும் ருசிகர தகவல் உள்பட அஸ்வின் கிரிக்கெட் வீரராக உருவானது எப்படி என்ற தகவல்கள் அனைத்தையும் சேர்த்து “ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்: எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி” என்ற ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் சித்தார்த் மோனாங்காவுடன் இணைந்து எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், "எனது வாழ்நாளில் நான் கிரிக்கெட் வீரராக உருவெடுத்தது எப்படி என்பதை பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் போல் கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் புதிய உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
அஸ்வின் leaks to மார்க் வாட்!
Ashwin's Biography

ஒவ்வொரு வீரரும் கிரிக்கெட்டில் கால்தடம் பதிக்க பல்வேறு தடைகளைத் தாண்டித் தான் வர வேண்டியிருக்கிறது. போட்டி நிறைந்த கிரிக்கெட் உலகில் வாய்ப்பு கிடைப்பது என்பது அசாதாரணம். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி தான் அஸ்வின் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இருப்பது அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடி 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் தமிழக வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பது மற்றுமொரு சாதனையாகும். இவர் இந்திய அணிக்காக 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளையும் விளையாடியுள்ளார்‌. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வரும் நிலையில், தனது கிரிக்கெட் வரலாற்றைத் தானே எழுதிய அஸ்வினுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com