நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற மிகப்பெரிய காரணம் ஷார்துல் தாகூர். அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற கதையை கூறியிருக்கிறார்.
நேற்று ஹைத்ராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஷார்துல் தாகூர். சுமார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணிக்கு பெருமை சேர்த்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் எந்த அணியாலும் ஷார்துல் தாகூர் வாங்கப்படவில்லை. ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்னர் லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மோஷின் கான் காயம் காரணமாக விலகினார். இதனால், அவருக்கு பதிலாக ஷார்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இவர் டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது இரண்டு விக்கெட்டுகள் எடுத்து கவனத்தை ஈர்த்தார். பின் நேற்றைய போட்டியில் இரண்டாவது ஓவரில் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி சன்ரைசர்ஸ் அணியின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். பின்னர் அதே ஓவரின் அடுத்த பந்தில் இஷான் கிஷான் விக்கட்டையும் வீழ்த்தி ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அந்தவகையில் அவர் இதுகுறித்து பேசும்போது, “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நான் ஐபிஎல்-ல் தேர்ந்தெடுக்கப்படாதபோது அவ்வளவுதான் என்று நினைத்தேன். இருந்தாலும், நான் நன்றாக திட்டம் தீட்டிவிட்டு ஐபிஎல் இல்லையென்றாலும், இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தேன்.
நான் ரஞ்சி டிராபியில் விளையாடும் போது ஜாகிர் கான் எனக்கு போன் செய்து உங்களை மாற்று வீரராக அழைக்கலாம். எனவே எதற்கும் தயாராக இருங்கள் என்று கூறினார். அப்படி மாற்று வீரராக அழைக்கப்பட்டால், போட்டியின் தொடக்க ஓவர்களை வீசலாம் என்றார்.
நான் எப்போதும் எனது திறமைகளை ஆதரித்து வருகிறேன். அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் வாய்ப்புகளை பயன்படுத்துவார்கள் என்று தெரியும். எனவே நான் அவர்களுக்கு எதிராக என் வாய்ப்புகளை பயன்படுத்த முடிவு செய்தேன். புதிய பந்தை வீசும்போது ஸ்விங் செய்தால் விக்கெட்டுகளை எடுக்கலாம். அதைதான் நான் செய்தேன். " என்று பேசினார்.