
நம் முன்னோர்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் நீண்ட நாள் உடல் வலுவோடு இருக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் எடுத்துக்கொண்ட உணவுமுறையே ஆகும். அன்றாட உணவில் அவர்கள் எடுத்துக்கொண்ட பழைய சோறே இதற்கு முக்கிய காரணமாகும். இன்று பெரும்பாலானோர் பழைய சோறு என்றாலே வெறுக்கிறார்கள். இதில் உள்ள நன்மைகளை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
பழைய சாதம் மற்றும் அதை ஊறவைத்த நீராகாரத்தில் நமக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளை விட அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சாதம் ஊறவைத்த தண்ணீர் சாதாரண தண்ணீரை காட்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
சாதத்தை நொதிக்கவைத்து தயாரிக்கப்படும் பழைய சாதம் அதிகளவிலான வைட்டமின் டி சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை அதிகப்படியான உடல் சோர்வை நீக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் வாயுவை அதிகரிக்காமல் பாதுகாப்பதுடன், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
பழைய சாதத்தில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது. சாதத்தை நெதிக்க வைக்கும்போது அதில் ஏராளமான நுண்ணுயிரிகளும் நுண்ணூட்டச்சத்துக்களும் உற்பத்தி ஆகின்றன. இவை நம்முடைய உடலின் பிஎச் அளவை மேம்படுத்துவதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
பழைய சாதம் மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. குடல் இயக்கங்கள் சீராக இருப்பதால் மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
கொளுத்தும் இந்த வெயிலில் மதியம் வைத்த சாதமாக இருந்தால் மாலையில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். மண் சட்டியில் வைப்பது இன்னும் நல்லது.
இரவு முழுவதும் சாதம் அந்த நீரில் நொதிக்க ஆரம்பிக்கும். காலையில் எடுத்துப் பார்த்தால் பழையசோறு நம்முடைய காலை உணவுக்குத் தயாராக இருக்கும். பழையசோறுக்கு தொட்டுக் கொள்ள பெஸ்ட் காமினேஷன் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும்தான்.
நன்கு தண்ணீரில் ஊறியிருக்கும் சாதத்தை கைகளால் பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து குடிக்கவும் செய்யலாம். சிலர் அந்த நீரை தனியே வடித்து எடுத்து நீராகாரமாக குடிப்பார்கள். அந்த சாதத்தில் தயிர் அல்லது மோர் சேர்த்தும் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
ஒரிஸா மாநிலத்தில் பழைய சோறு மிக முக்கியமான பாரம்பரிய உணவாகக் கருதப்படுகிறது. இதை அவர்கள் Pakhala Bhata என்று அழைக்கிறார்கள். ஒரிஸாவில் பெரிய பெரிய பைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் இதை சாப்பிட வைத்திருக்கிறார்கள்.
கோடையை தணிக்க இந்த அமுதமான பழைய சோற்றை உண்டு ஆரோக்கியமாக இருப்போம்!