கவுதம் கம்பீர் தான் விராட் கோலி உடலில் கூடு விட்டு கூடு பாய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடது கை தொடக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர், இந்தியாவின் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்குகிறார்.
கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான உறவு குறித்து நம் அனைவருக்குமே தெரியும். ஒருகாலத்தில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள். உள்ளே எப்படியோ, ஆனால், மைதானத்தில் அவர்களின் காரசாரமான வாக்குவாதங்கள் ஏராளம் நடக்கப்பெற்றன. இதை ரசிகர்களும் மீம்ஸ் போட்டு தாக்குவார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் மைதானத்திற்கு வந்தாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கோப சுபாவத்தையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு நிலைமையை சூப்பராக வழிநடத்துகிறார்.
இப்படியான நிலையில், ஏபிபி உச்சி மாநாட்டில் ஏராளமான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் கம்பீர், “ நான் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருக்கிறேன். முதலில் ராணுவத்தில் சேரவே விருப்பப்பட்டேன். அதுதான் என் முதல் காதல். அதுதான் எனது ஒரே வருத்தம்.
நான் பாகிஸ்தானும் இந்தியாவும் விளையாட கூடாது என்று நினைக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட பதிலாகும். நாட்டு மக்களையும் வீரர்களையும் விட கிரிக்கெட் போட்டிகள், பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் முக்கியமானவர்கள் அல்ல. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எதுவும் இருக்கக்கூடாது.
ஒரு கிரிக்கெட் வீரரின் உடலில் நுழைய வேண்டும் என நினைத்தால், அது விராட் கோலியாகத்தான் இருக்கும். ஏனென்றால், அவர்தான் அணியிலேயே ஃபிட்டான வீரர்.” என்று பேசியிருக்கிறார்.
கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி, இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்கள், பாராட்டு மற்றும் ஆர்வத்தின் கலவையானவர்கள்.