ஆன்சைட்டி(anxiety) என்பது கவலை, பயம் அல்லது மன அழுத்தத்தின் உணர்வாகும். பதட்டம் என்பது எல்லோருக்கும் வருவது இயல்பானது தான். ஆனால் பதட்டமும் அதன் அறிகுறிகளும், உணர்வுகளும் சாதாரண வாழ்க்கை முறைக்கு இடையூறாக இருக்கும் பொழுது தான் மருத்துவ உதவி தேவைப்படுகிறது.
அறிகுறிகள்:
இதயத்துடிப்பு, வியர்த்தல், நடுக்கம், மூச்சுத் திணறல், தலைவலி, சோர்வு, செரிமான பிரச்சனைகள் போன்றவை உடல் ரீதியான அறிகுறிகளாகும்.
மனரீதியாக பார்த்தால் அதிகப்படியான கவலை, அமைதியின்மை, எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாவது, தூக்கமின்மை, எரிச்சல், அதிகம் யோசிப்பது போன்றவை ஏற்படும்.
சமூக தொடர்புகளை தவிர்ப்பதும், சில விஷயங்களை செய்ய முடியாமல் போவதும் அறிகுறிகளாகும்.
காரணங்கள்:
மரபியல் காரணமாக குடும்பத்தில் ஆன்சைட்டி வரலாறு இருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிகப்படியான கஃபைன், ஆல்கஹால் பயன்பாடுகள் காரணமாகவும், சில மருந்துகளின் மோசமான விளைவுகளாலும் உண்டாகலாம்.
அதிர்ச்சி, இழப்பு, கஷ்டங்கள் அல்லது வேறு சில மன அழுத்தமான சூழ்நிலைகள் காரணமாகவும் ஏற்படலாம்.
தைராய்டு உள்ளிட்ட வேறு சில உடல் சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் ஏற்படலாம்.
தீர்வுகள்:
இதற்கென்று தனிப்பட்ட சிகிச்சைகள் எதுவும் கிடையாது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட நோய் கிடையாது. உடல், மனம் இரண்டும் சார்ந்த பிரச்சனையாகும்.
போதுமான அளவு தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை சரியாக நிர்வகிப்பது போன்ற வாழ்க்கை முறையிலான மாற்றங்கள் பதற்றத்தை போக்க உதவும்.
தியானம், யோகா போன்றவை செய்வதுடன் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் அவசியம்.
கஷ்டங்கள், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நபர்கள் அல்லது சூழ்நிலைகளை தவிர்ப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.
அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது, அமைதி இல்லாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பதை தவிர்த்து தங்களது மனதை கவனித்துக் கொள்வதுடன், தங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்த பிரச்சனைகள் மட்டும் கிடையாது; மனம் சார்ந்ததும் கூட. பரபரப்பான வாழ்க்கை முறையில் இந்த மன அழுத்தம் (stress), மனச்சோர்வு (depression) மற்றும் மனக்கவலை (anxiety) போன்றவை உண்டாகின்றன.
மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகி ஆன்சைட்டிக்கு சிகிச்சை பெறலாம். இதற்கு மனநல ஆலோசனை (therapy) அல்லது மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.