டி20 உலகக்கோப்பை போட்டியை வென்று, கோப்பையை கையில் ஏந்துவேன் என்று கூறியிருக்கிறார், இளம் வீரர் ரிங்கு சிங்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 4ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இருக்கின்றன. குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் உள்ளன.
அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதி போட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன. டி20 இந்திய அணியில், கேப்டனாக ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சப்ஸ்ட்டிட்யூட் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரிங்கு சிங், இந்திய அணியில் அறிமுகமானார். பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர், 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டார். இருந்தாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை சப்ஸ்ட்டிட்யுட்டாக தேர்ந்தெடுத்தது உகந்ததாக இல்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கிரிக்கெட்டில் விளையாடியது முதல் நான் ஜூனியர் அளவில் மட்டுமே சில கோப்பைகளை வென்றுள்ளேன். சீனியர் அளவில் எதையும் வெல்லவில்லை. இப்போதும் நான் உலகக்கோப்பைக்கு செல்ல உள்ளேன். அதை நாம் வெல்வோம் என்று நம்புகிறேன். அதை வென்ற பின் நான் கோப்பையை கையில் ஏந்துவேன் என்று நம்புகிறேன். என்னுடைய நாட்டுக்காக மிகப்பெரிய கோப்பையை வென்று, அதை கையில் தூக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும்.
எனவே அடுத்த முறை சிறப்பாக விளையாடுவதற்கு நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அந்த 5 சிக்சர்கள் அடித்த பின்பு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. அதனால் விளம்பரங்கள் கிடைக்கின்றன. பலரும் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். அதனால் தனியாக என்னால் செல்ல முடியவில்லை. அந்த வகையில் வாழ்க்கையில் ஏதோ செய்துள்ளேன் என்று நான் உணர்கிறேன்." என்று கூறினார்.