நான் ஐபிஎல் தொடரில் ஒரு விதியை மாற்றுவேன் என்றால், அது ஒரு அணியில் வீரர்களை வெளியிடலாம் என்ற விதியை மாற்றுவேன் என்று பேசியிருக்கிறார் சஞ்சு சாம்சன்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் கோலாகலமாக துவங்கப்போகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் அணியில் முக்கியமான வீரர்களான திருவ் ஜுரேல், ரியான் பராக், மற்றும் ஷிம்ரோன் ஹெட்மையரை தக்கவைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி சஞ்சு சாம்சன் பேசினார்:
“இது அணிக்கு பெரிய பலமாக இருக்கும். ஒரு அணியில் வீரர்கள் நீண்ட காலம் விளையாடினால், அதிக அனுபவம் கிடைக்கும். அது அணியின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். எனக்கு கேப்டனாக வேலை செய்வதையும் எளிதாக்குகிறது.
ஐபிஎல் தொடர் ஒரு அணியை வழிநடத்தவும், சிறப்பாக விளையாடவும் வாய்ப்பு தருகிறது. நெருங்கிய நட்புகளையும் தருகிறது. அனைவரும் நெருக்கமாக இருப்போம்.
ஜோஸ் பட்லர் என் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். அவர் எனக்கு பெரிய சகோதரனைப் போல் இருந்தார். நான் கேப்டன் ஆனபோது, அவர் துணை கேப்டனாக இருந்து எனக்கு பெரிதும் உதவினார். அவர் வெளியே சென்றது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இங்கிலாந்து தொடரின் போது கூட, அவரிடம் டின்னருக்கு அமர்ந்து இதைப் பற்றிப் பேசினேன். இது எனக்கு எளிதாக மறந்துவிட முடியாத ஒன்று.
நான் ஐபிஎல்-ல் ஒரு விதியை மாற்ற முடியும் என்றால், நான் ஒன்றைதான் மாற்றுவேன். அதாவது வீரர்களை வெளியிட வேண்டாம் என்ற விதியை கொண்டு வருவேன். இது அணியின் தேவையான மாற்றம்தான் என்றாலும், உறவால் இணையும்போது வருத்தமளிக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, முழு அணிக்கும், உரிமையாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கடினமான ஒரு முடிவாக இருந்தது. ஜோஸ் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருந்தார்.” என்று பேசினார்.