
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் 36 வயதான ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குறைந்த வயதில் இந்த பொறுப்புக்கு வந்த நிர்வாகி என்ற பெருமையை பெற்றுள்ள இவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை இறுதி செய்வதில் உள்ள முட்டுக்கட்டையை நீக்குவதே இவருக்கு உள்ள முதல் சவாலாகும்.
ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி.யின் தலைவராக பதவி ஏற்றிருப்பது மிகப்பெரிய கவுரவம் என்றும், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஐ.சி.சி. இயக்குனர்களுக்கும், உறுப்பு நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
'LA28 ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம், மேலும் கிரிக்கெட்டை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாக மாற்றுவதற்கு நாங்கள் தயாராகி வருவதால், இது விளையாட்டிற்கு ஒரு உற்சாகமான நேரம்' என்று கூறிய அவர் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.
உலகளாவிய விளையாட்டாக ஆவதற்குரிய கிரிக்கெட்டுக்கு சாத்தியம் உண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிரிக்கெட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லவும், ஐ.சி.சி. குழு மற்றும் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக கூறியுள்ளார்.