
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் தான் அதிகளவில் பாராட்டப்படுகின்றனர். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை வெகு சிலர் பாராட்டைப் பெற்றாலும், பேட்ஸ்மேன்களின் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை வென்று தந்த கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஜாகீர் கான் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற பௌலர்களின் வரிசையில், தற்போது ஜஸ்பிரீத் பும்ராவை ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அதிகளவில் புகழ்கின்றனர். பும்ரா அப்படி என்ன செய்தார்? ஏன் அவரை கிரிக்கெட் உலகமே பாராட்டுகிறது என்பதற்கான விடையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்த பும்ரா, சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் நிழலில் வளர்ந்தார். குஜராத் மாநில அணிக்காகத் தான் பும்ரா முதன்முதலில் கிரிக்கெட் விளையாடினார். அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறக்கப்பட்டார். இவர் வித்தியாசமாக பந்துவீசி தேர்வுக்குழுவின் கவனத்தைத் தன்பக்கம் இழுத்தார். இதன் பலனாக 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார் பும்ரா. அதன்பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பிடித்து, இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.
முன்பெல்லாம் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கேற்றால் பெரும்பாலும் தோல்வியே மிஞ்சும். ஏனெனில் இந்த நாட்டில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. அதற்கேற்ப இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படத் தவறியதால் தான் வெற்றி பெற அதிகளவில் சிரமப்பட்டனர். ஆனால், இன்று நிலைமையே வேறு. ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இருப்பதால் எதிரணி வீரர்களை தனது தரமான பௌலிங்கின் மூலம் திணறடிக்கிறார்.
இவரது வித்தியாசமான ஆக்ஷனால் பந்தை கணிக்க முடியாமல் இன்று வரையிலும், எதிரணி வீரர்கள் தடுமாறி அவுட்டாகி வெளியேறுகின்றனர். இதன் பலனாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது இந்தியா. இந்த வெற்றிக்கு பும்ராவுடன் சேர்ந்து முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் துணை நின்றனர். பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பினாலும் கூட, எதிரணியை பௌலிங்கில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பும்ரா தான். தற்போது டெஸ்டில் உலகளவில் நம்பர் 1 பௌலராக இருக்கிறார் ஜஸ்பிரீத் பும்ரா.
சமீபத்தில் இந்திய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியதில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கியப் பங்கு வகித்தார் பும்ரா. மற்ற நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் இவரது பௌலலிங்கை புகழ்ந்து தள்ளும் அதே வேளையில், பும்ராவை எதிர்கொள்வது எப்படி என டிப்ஸ்களையும் வழங்குகிறார்கள். வேகப்பந்து வீச்சில் சாதனைகளைப் படைத்து வரும் இந்தியாவின் வேகப் புயல் இன்னமும் பல போட்டிகளில் எதிரணிகளைத் திணறடிக்கத் தான் போகிறார்.
இந்திய வேகப் பந்துவீச்சு வரலாற்றையே பும்ராவின் பந்துவீச்சு தற்போது மாற்றிவிட்டது. இப்பேற்பட்ட வீரரை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொண்டாடுவதில் ஆச்சரியமே இல்லை. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் யார்க்கர்களை வீசி, எதிரணியின் ரன்ரேட்டைக் குறைக்கும் பும்ராவின் விக்கெட் வேட்டை மேலும் மேலும் தொடரும்…