
கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டிகளில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் போட்டியாகும்.
இந்த தொடரின் 2 சீசன்களிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணியால் 2-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. முதல் சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின.
அந்த வகையில் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 11-ந் தேதி நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. கடந்த சீசனில் நடந்த இரண்டு போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பரிசுத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடப்பு இறுதிப்போட்டிக்கான பரிசுத் தொகையாக 49.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.30.78 கோடியை தட்டிச்செல்லும். அதேபோல் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.18.47 கோடி கிடைக்கும். தற்போது அறிவித்துள்ள பரித்தொகை கடந்த போட்டிகளை (2019-21, 2021-23) விட ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.15.38 கோடி பரிசுத் தொகையும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.6.83 கோடியும் வழங்கப்பட்டிருந்தது.
அதுபோக இந்த தொடரில் கலந்து கொண்ட அணிகளுக்கு புள்ளி பட்டியலில் பிடித்த இடங்களை கணக்கில் கொண்டு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு ரூ.12.24 கோடி பரிசு அளிக்கப்பட உள்ளது. நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு ரூ.10.2 கோடியும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு ரூ.8.16 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
‘பரிசுத் தொகை அதிகரிப்பு டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னுரிமைப்படுத்தவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் உத்வேகத்தை வலுப்படுத்தவும் ஐ.சி.சி. முயற்சிப்பதை காட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நகர்வைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.