ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா அணி பங்கேற்குமா அல்லது புறக்கணிக்குமா என்ற விஷயம் தான் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் என்ன கூறுகின்றனர் மற்றும் பிசிசிஐ-யின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் தொடர்களில் கோப்பையைக் கைப்பற்ற பல நாடுகளுக்கு இடையில் பலத்த போட்டி நடக்கும். கடந்த மாதம் தான் 9வது டி20 உலகக் கோப்பை நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி கோப்பையைக் கைப்பிற்றி பல ஆண்டு கனவை நனவாக்கி உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதல் 7 இடங்களைப் பிடித்துள்ள அணிகளும், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியும் இத்தொடரில் பங்கேற்கும்.
1996 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக் கோப்பைத் தொடரின் சில ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது. அதற்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் ஒரு ஐசிசி தொடர் முழுமையாக நடைபெற இருக்கிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்று வரை கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.
பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா இதுகுறித்து எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் விரும்புகின்றனர்.
“இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடும் பட்சத்தில் இங்குள்ள ரசிகர்களின் அன்பை புரிந்து கொள்வார்கள்” என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
“அரசியல் களம் வேறு, கிரிக்கெட் களம் வேறு என்றும், இந்திய அணி நிச்சயமாக பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில், இந்தியா பாகிஸ்தான் போட்டி மார்ச் 1 ஆம் தேதி லாகூரில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் லாகூரிலேயே நடத்தப்படுகிறது. இருப்பினும், இந்திய அணியின் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என ஐசிசி-யிடம், பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணித்தால், 9வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தகுதி பெறும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா அல்லது இலங்கைக்கு வாய்ப்பை விட்டுக் கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.