உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கலக்கப்போவது யாரு? இந்திய அணியின் ரோகித் சர்மாவா, விராட் கோலியா அல்லது ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க்கா, ஹஸ்லேவுட்டா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் (2023) போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (19 ஆம் தேதி) குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. ஆட்டத்தின் முடிவு என்ன என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
போட்டியை நடத்தும் இந்தியா கோப்பை வெல்லப் போகிறதா அல்லது ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச் செல்லப் போகிறதா என்கிற எதிர்ப்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் உள்ளது. ஆனாலும், தனிப்பட்ட முறையில் வீரர்களின் சிறப்பான ஆட்டம் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கலாம்.
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே முன்னணியில் உள்ள அணிகள் என்பதால் போட்டி கடுமையானதாகவே இருக்கும். இரு அணிகளுமே தங்களது அணி வீரர்களின் சிறப்பான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் நம்பியிருக்கின்றன.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோல ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார், ஜோஷ் ஹஸ்லேவுட், ஸ்டீவ் ஸ்மித் முக்கிய ஆட்டக்காரர்கள்.
தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, விளாசி ஆடி ரன்களை குவிப்பவர் என்பது மிட்செல் ஸ்டார்க்குக்கு நன்கு தெரியும். எனவே அவரது விக்கெட்டை வீழ்த்துவது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடும்.
ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க்கையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் அவர் சரியாக ஆடாத போதிலும், கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதியில் அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால், கொல்கத்தாவில் காட்டிய அதே வேகம் ஆமதாபாதிலும் தொடருமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் ரன் குவிக்கும் மெஷின் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர் விராட் கோலி. சமீபத்தில் மும்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி 50-வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலியை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது. ஹஸ்லேவுட் பந்துவீச்சில் இது சாத்தியமா என்பது தெரியவில்லை.
இந்த போட்டியில் விராட் கோலியை ஹஸ்லேவுட் ஐந்துமுறை வீழ்த்தியுள்ளார். ஆஸிக்கு எதிரான போட்டியில் 85 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஹஸ்லேவுட் பந்தில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் கலக்கப்போவது ரோகித்தா, விராட் கோலியா, மிட்சல் ஸ்டார்க்கா அல்லது ஹஸ்லேவுட்டா என்பது நாளை தெரிந்துவிடும்.