

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஜியோ ஹாட்ஸ்டார் மிகவும் முக்கிய இடத்தில் உள்ளது. அதிகளவு மக்கள் விரும்பி பார்க்கும் இந்த தளத்தில் திரைப்படங்கள், தொடர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை வழங்கும் ஸ்ட்ரீமிங் தளமாகும். குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்த தளம் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை 3 பில்லியன் மதிப்பில்( (தோராயமாக ரூ. 25,000 கோடி) வாங்கி இருந்தது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2024, சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025, பெண்கள் உலகக் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026 போன்ற முக்கிய போட்டிகள் அடங்கும்.
இந்நிலையில், நிதி இழப்புகள் காரணமாக, ஜியோ ஹாட்ஸ்டார் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பியதில் ஏற்பட்ட கடுமையான நிதி இழப்பு காரணமாக, (குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட அதிகளவு இழப்பு)இந்த ஒப்பந்தத்தை தொடர முடியாது என்று ஐசிசியிடம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் வெளியேறுவதாக அறிவித்துள்ளது ஐசிசி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள ஐ.சி.சி தற்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது. இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களையும் ஐ.சி.சி அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய மற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடர், வரும் பிப்ரவரி 2026 முதல் தொடங்க உள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் ஒளிபரப்பு உரிமத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், போட்டிகளை நேரலையில் காண்பதில் தடங்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.