துபாயில் அக்.17 அன்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை மகளிர் அணிக்காக முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதியது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட். முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்களில் வெளியேறினார். பெத் முனி நிலைத்து ஆடி 44 ரன்களை குவித்து ரன்அவுட் ஆனார். ஜார்ஜியா 5 ரன்களில் வெளியேறினார். பவர்பிளேவில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் பத்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணியினர் 53 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தஹ்லியா மெக்ராத் (27) மற்றும் எல்லிஸ் பெரி (31) நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா மகளிர் அணி. தென் ஆப்பிரிக்க அணியின் அயபோங்க் காக்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
135 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான லாராவும் டாஸ்மினுவும் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடினார்கள்.
பவர்பிளேவில் மட்டும் 43 ரன்களை குவித்தது தென் ஆப்ரிக்கா. டாஸ்மின் பிரிட்ஸ் அவுட் ஆனதும் ஜோடி சேர்ந்த அன்னக் போஷ் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தார். 10 ஓவர் முடிவில் 74/1 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இருந்தது. 17.2 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 135/2 ரன்களை கடந்து வெற்றியை பெற்றது. அன்னக் போஷ் 48 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இறுதிவரை வெளியேறாமல் அணியின் வெற்றிக்கு அதிக பங்களித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியின் தொடர்ச்சியான 7 மேட்ச் வெற்றிக்கு தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான முடிவுரை எழுதியது. இந்த அபார வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டியில் முதல் ஆளாக நுழைந்து விட்டது. மாறாக ஆஸ்திரேலியா அணி தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் நேரம் வந்து விட்டது. இன்று நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்தும் மேற்கிந்திய அணிகளும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதும்.