இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா அணி தீவிரமாக உள்ளது. இந்தியாவை வெல்ல வேண்டுமெனில் எந்த வீரரை நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய கேப்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வருகின்ற நவம்பர் மாதத்தில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிய போது தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. இம்முறையும் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பதால் ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் கடந்த இரண்டு முறை சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இம்முறை தொடரை வெல்ல ஆயத்தமாக உள்ளது. அதற்கேற்ப ஆஸ்திரேலிய வீரர்கள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலியா விளையாடும் மிகப்பெரிய தொடர் என்றால் அது பார்டர் கவாஸ்கர் தொடர்தான். இந்திய அணி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறந்து விளங்குவதால், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது சுலபமாக இருக்காது. அதேநேரம், இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியாவும் கடுமையாக போராடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள், இந்தியாவை எங்கள் அணி நிச்சயமாக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். அதோடு ஆஸ்திரேலியா வீரர்களும் அவ்வப்போது இந்தத் தொடர் குறித்து சுவாரஸ்யமாக பேசி வருகின்றனர். அவ்வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பேட்ஸ்மேன்களைப் பார்த்து தான் எதிரணியினர் பயப்படுவார்கள். இதற்கு முன்பெல்லாம் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெறும் போது, விராட் கோலியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினால் நாங்கள் வென்று விடுவோம் என தெரிவித்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஆம், பௌலர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்கள் சொல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சமீப காலங்களில் அசுர வளர்ச்சியைப் பெற்றது தான்.
ஆஸ்திரேலிய கேப்டன் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பற்றி கூறுகையில், “ஜஸ்பிரீத் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். நான் அவருடைய ரசிகன். எங்களுக்கு எதிரான தொடரில் நாங்கள் பும்ராவை கட்டுப்படுத்தி ரன்களை குவித்து விட்டால், நிச்சயமாக தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. உலகத்தரம் வாய்ந்த பௌலருக்கு எதிராக ரன் குவிப்பது சிரமம் தான் என்றாலும், வெற்றிக்கு இதுதான் அவசியமாகும். மிகவும் அதிர்ஷ்டவசமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவை வென்று விட்டோம். இப்போது டெஸ்ட் தொடரிலும் அதே உத்வேகத்துடன் வெல்ல முயற்சி செய்வோம்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து நான் அதிகம் விளையாடியது இல்லை. அவர் இந்திய அணியை சரியான திட்டத்துடன் வழிநடத்துவார் என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு முறையும் எங்கள் மண்ணில் இந்தியா வென்றுள்ளது. இதனை நினைவில் வைத்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள்” என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.