ரொனால்டோ உலகத்திலேயே நான் தான் சிறந்தவன் என்று பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
கால்பந்து விளையாட்டு என்றால், முதலில் ஞாபகத்துக்கு வரும் இருவர் மெஸ்ஸி, ரொனால்டோ. இருவருக்கும் உலகளவில் அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர். ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் பல குறிப்பிட வேண்டிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். 39 வயதாகும் ரொனால்டோ மொத்தம் 923 கோல்களை அடித்துள்ளார். இவர்தான் கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்திருக்கும் நபர்.
ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காகவே அதிக கோல்களை அடித்திருக்கிறார். அந்த அணிக்காக மட்டும் 450 கோல்களை அடித்து இருக்கிறார். யுவன்டஸ் அணிக்காக சீரி ஏ தொடரில் 121 கோல்களை அடித்து இருக்கிறார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145 கோல்களையும், ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களையும் அடித்து இருக்கிறார். அவர் தற்போது ஆடிவரும் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரொனால்டோ ஐந்து முறை பேலன்தோர் விருது பெற்றிருக்கிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரொனால்டோ, “கால்பந்து வரலாற்றில் நான் இதுவரை பார்த்ததில், முழுமையான கால்பந்து வீரனாக என்னை நான் பார்க்கிறேன். பல்வேறு மக்களுக்கு மெஸ்ஸி, மரடோனா, பீலே என பலரை பிடித்திருக்கலாம். நான் அதை மதிக்கிறேன்.
ஆனால், கால்பந்து விளையாட்டில் நான் மிகவும் முழுமையானவன். கால்பந்து வரலாற்றில் கோல் கணக்கு அடிப்படையில் நான் தான் சிறந்த வீரன். என்னை விட சிறந்த வீரரை நான் கால்பந்து வரலாற்றில் பார்த்ததில்லை. இதை நான் என் இதயத்திலிருந்து உண்மையைச் சொல்கிறேன்.” என்று பேசினார்.
இதற்கு ரசிகர்கள் சிலர் இது ஒரு ஆணவ பேச்சு என்றும், மேலும் சிலர் சரிதான் என்று கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் மெஸ்ஸி குறித்து ரொனால்டோ பேசுகையில், “ மெஸ்ஸியுடன் எனக்கு ஒருபோதும் மோசமான உறவு இருந்ததில்லை. நாங்கள் 15 வருடமாக பல்வேறு விருதுகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். எப்போதும் நன்றாகப் பழகி வருகிறோம். “ என்று பேசியிருக்கிறார்,.