மஹாபாரதத்தின் பிரம்மாண்டமான கதாபாத்திரங்களுள் பிரமிக்க வைக்கும் பாத்திரம் பிதாமஹரான பீஷ்மரின் பாத்திரம்!
இச்சாமரணியான அவர் விண்ணுலகை நோக்கி ஏகிய தினம் பீஷ்மாஷ்டமி தினம் ஆகும்.
மாக மாதம் (தமிழில் தை மாதம்) சுக்ல அஷ்டமி திதி அன்று பீஷ்மரைத் துதித்து பூஜிக்கும் நாள் பீஷ்மாஷ்டமி.
அன்று அருகிலுள்ள நதிக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்து, எள் பிண்டம் தருவது, துதிப்பது உள்ளிட்டவற்றை பாரதமெங்கும் உள்ள மக்கள் தவறாது காலம் காலமாகச் செய்து வருகின்றனர்.
இந்த தினத்தில் செய்யவேண்டியவற்றைச் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
இந்த பீஷ்மாஷ்டமி விரதத்தாலும் தர்ப்பணத்தாலும் ஒருவருடைய சந்ததியினர் பீஷ்மர் கொண்டிருந்த அனைத்து நற்பண்புகளையும் கொள்வார்கள் என்பது அனைவரது நம்பிக்கையுமாகும்.
வங்காளத்தில் இது ஒரு விடுமுறை தினம். இஸ்கான் கோவில்களில் இந்த தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கிருஷ்ணரின் அனுக்ரஹம்:
பாரதப் போர் முடிந்த பிறகு தர்மர் அரசாட்சியை செவ்வனே நடத்தி வந்த நாட்களில் ஒரு நாள் அவர் கிருஷ்ணனைச் சந்திக்கச் செல்கிறார். அவர் சென்ற சமயம் கிருஷ்ணர் நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்ட அவர், “பகவானே! நீங்கள் தியான நிஷ்டையில் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது” என்றார்.
உடனே கிருஷ்ணர்,
“அவியும் காலத்து அக்னி போல சரதல்பத்தில் சயனித்துக் கொண்டிருக்கும் பீஷ்மர் என்னை தியானம் செய்கிறார். அவரிடம் என் மனம் சென்றது.
அரசர் கூட்டம் அனைத்தையும் தன் வலிமையால் வென்றவர்.
கர்ப முறைப்படி கங்காதேவியால் சுமந்தவர்.
வசிஷ்டரின் சிஷ்யர்.
ஆறங்கங்களுடன் நான்கு வேதம், திவ்ய அஸ்திரங்களைத் தரித்துள்ள தேஜஸ் கொண்டவர்.
பரசுராமரின் அன்புக்குப் பாத்திரமான சிஷ்யர்.
என்னைச் சரண் அடைந்தவர்.
புருஷர்களில் சிறந்த மஹாத்மா.
இவ்வுலகில் நடந்ததையும், நடக்கின்றதையும், நடப்பதையும் அறிந்தவர்.
தர்மம் தெரிந்தவர்களில் உத்தமமானவர். அவரிடம் என் மனம் சென்றது.
அவர் புவியிலிருந்து நீங்கி விட்டால் பூமியானது சந்திரன் இல்லாத இரவு போல ஆகி விடும்.
அவரிடம் உடனே சென்று தர்மங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வீராக”
என்றார்.
அனைவரும் உடனே ரதங்களில் ஏறி பீஷ்மர் சரதல்பத்தில் படுத்திருந்த இடத்தை அணுகினர்.
கிருஷ்ணனைக் கண்ட பீஷ்மர் புளகாங்கிதம் அடைந்தார். பலவாறாகத் துதிக்க ஆரம்பித்தார்.
இதுவே 'பீஷ்ம ஸ்தவராஜம்' என அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணர் பீஷ்மரிடம் தர்மருக்கு தர்மத்தின் நுட்பங்களை விளக்குமாறு கூற பீஷ்மரோ, “எனது அங்கங்கள் அம்புகளால் துளைக்கப்பட்டதால் புத்தியானது தெளிவானதாக இல்லை. மயக்கம் அடைகிறது. எவ்விதம் நான் உற்சாகமாகப் பேச முடியும்?” என்றார்.
உடனே கிருஷ்ணன், “பீஷ்மரே! இதோ நான் அனுக்ரஹித்து உமக்கு வரம் தருகிறேன். சிறிதும் களைப்பே இல்லாமல் உமது வித்யைகள் யாவும் தெளிந்து விளங்கட்டும். உமது புத்தி கூர்மையாகட்டும்,” என்று அருள் பாலிக்கிறார்.
உடனே பெருகி வரும் கங்கை நதி வெள்ளமென அவர் தர்ம நுட்பங்களை தர்மருக்கு விளக்குகிறார்.
இவற்றை சாந்தி பர்வம் மற்றும் அநுசாஸன பர்வத்தில் காணலாம்.
உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாயிற்று.
உடனே பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா! இன்றோடு நான் படுத்து ஐம்பத்தெட்டு நாட்கள் ஆயின. இதோ மாக மாஸம் சுக்ல பக்ஷம் வந்து விட்டது. ஸத்யமே சிறந்த பலம்,“ என்று கூறி தியானத்தில் மனத்தைச் செலுத்தினார்.
அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. எந்தந்த அவயவத்தையெல்லாம் அவர் தியானம் மூலம் விட்டாரோ அந்தந்த அவயவங்களில் அம்புகள் இல்லாமல் போயின. அவரது ஆத்மா ஸ்வர்க்கத்திற்குக் கிளம்பிற்று.
அனைவரும் துக்கம் தாளாமல் அழுது புலம்பினர். பின்னர் அனைவரும் ஜல தர்ப்பணம் செய்தனர்.
அந்த ஜல தர்ப்பணத்தை விடாமல் அனைவரும் செய்ய வேண்டிய நாளே பீஷ்மாஷ்டமி.
முன்னோர் செய்து வந்த உன்னதமான நற்காரியங்களை நாமும் விடாமல் செய்வோமாக!