
உணர்ச்சிவேக முரட்டுத்தனத்தை முறைப்படுத்த உடற்பயிற்சி, விளையாட்டுதான் ஒரே வழி.
‘பட்டாக் கத்திகளுடன், கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் பெருங்கலாட்டா’ என்ற செய்தி, படித்தோர் அனைவரையும் பெரிதும் அச்சுறுத்தின. எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்?
‘பஸ் டே’ என்ற பெயரில் சில மாணவர்கள் புரியும் அட்டகாசம், அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. தொடர்ந்து ஓராண்டு காலம் தம்மை வீட்டிலிருந்து கல்லூரிக்கும் மீண்டும் கல்லூரியிலிருந்து வீட்டிற்கும் அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரைப் பாராட்டி தம் நன்றியை மாணவர்கள் தெரிவித்துக் கொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான், அந்த நாகரிக சம்பிரதாயம். ஆனால் நாளாவட்டத்தில் கதாநாயகப் புகழுக்கு ஏங்கிய சிலர் அந்தப் புகழைப் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியும், வன்முறையாலும் ஈட்ட முயன்றபோதுதான் அந்த சம்பிரதாயம், சாக்கடையாயிற்று. நல்லவேளையாக இந்த பழக்கத்துக்கு காவல்துறை தடை விதித்து விட்டது.
ஆனால் அது வேறுவிதமாக, ‘ரூட்தல’ என்ற பேருந்தில் பயணிக்கும் மாணவர்களுக்கான தலைவர் பதவிக்கான போட்டியாகவும் மாறியது. இதன் விளைவுதான் பட்டாக் கத்திகளுடனும், பழிவாங்கும் மனப்பான்மையுடனும், கல்லூரிகளுக்கிடையேயான விரோதத்துடனும் மாணவர்கள் வலம் வந்தது. ‘ஆயுதங்களுடன் வரும் மாணவர்கள் சிறையிலடைக்கப்படுவர்’ என்ற நிலைப்பாட்டையும் காவல்துறை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒழுங்கீனத்துக்கு என்ன காரணம்? துடிப்பும், ஆர்வமும், சாதிக்கும் வேட்கையும் இளைஞர்களின், குறிப்பாக மாணவர்களின் அடிப்படை குணங்களாகும். இதற்கு நாம் சரியான வடிகால் அமைத்துத் தந்திருக்கிறோமா? அப்படி இல்லாததால்தான் வீட்டில் முதியோர் பேச்சை அலட்சியப்படுத்துவது என்று ஆரம்பித்து, பஸ் டே வன்முறை, பைக் ரேஸ் சாகசம் என்றெல்லாம் அவர்களுடைய ஒழுங்கீனங்கள் அடுத்தடுத்துப் பெருகிக் கொண்டே போகின்றன.
பள்ளிக்கூடம், கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படாதது இந்த ஒழுங்கீனத்துக்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். பள்ளிகளில் ஓடி விளையாடிய காலத்தில் வேகமான உணர்வுகளுக்கு நல்ல வடிகால் கிடைத்தது. தினமும் பி.டி. (Physidal Training) வகுப்புகள் கட்டாயமாக இருந்தன. ஆனால், படிப்பு, மதிப்பெண், உயர் கல்வி, நிறைய சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என்று விளையாட்டு உணர்வுகள் திசை திரும்பின.
அதனாலேயே இயற்கையான, இயல்பான இளமை வேக உணர்வுகள் எல்லாம், அமுக்கப்பட்ட எரிமலையாக மாறின. அடுத்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும்போது அங்கும் சரியான வடிகால் கிடைக்காததால் அது, எந்தக் கணமும் வெடிக்கக் காத்திருக்கிறது. பால பருவம் விடலைப் பருவமாகிவிட்டதால் தான், தனது, தலைமை என்ற அகங்காரமும் தலையெடுக்கிறது. விளைவு, எல்லாத் தரப்பினருக்கும் அமைதியின்மை, நாசமாகும் பொதுப்பொருள் நாசம் மற்றும் பாழாகும் எதிர்காலம் ஆகியனதான்.
மாணவர்கள் அல்லாத இளைஞர்கள் பலரிடம் இப்போது பைக் ரேஸ் என்ற அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வெறி பரவி வருகிறது. சந்தடிமிகுந்த பகுதிகளில், போய்வந்து கொண்டிருக்கும் மக்களை கதிகலங்க வைக்கும் வகையில் வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தடையே இல்லாத, மக்கள் நடமாட்டமில்லாத இரவு வேளையிலும் இப்படி வெறித்தனமாக வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். இந்தச் சம்பவங்களும் முறையான வடிகால் இல்லாத குறையால் நடைபெறுவதுதான்.
மறுபடியும் பி.டி. வகுப்பை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாயமாக்கலாம். இதனாலேயே விளையாட்டில், தனி நபர் மற்றும் குழு சாதனைகள் நிகழ்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பணத்தைப் பந்தயம் வைத்து நடத்தப்படும் பைக் ரேஸ்களை எப்படித் தடுப்பது? குறிப்பாக சென்னை பசுமைவழிச் சாலை, அமைச்சர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. அவர்கள் தத்தமது பணிகளுக்குப் போய்வர வசதியாக அந்தச் சாலையில் வேகத்தடையே இல்லை. இதுவே ரேஸ் பிரியர்களுக்கு மிகவும் சாதகமாகப் போய்விட்டது. ஆங்காங்கே வேகத்தடைக்கான தடுப்புக் குறுவேலியை நிறுத்தி வைப்பதற்கு பதிலாக இந்தச் சாலையில் ஆங்காங்கே வேகத் தடைகளைப் பதிக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதனால் பைக் ரேஸ் பிரச்னை முற்றிலுமாக நீங்கும்.
ஆகவே உடற்பயிற்சி, விளையாட்டு என்ற வடிகால்கள் இளைஞர்களின் குற்றம் சார்ந்த உணர்வுகளை நல்வழிக்குத் திருப்பிவிட முடியும். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என்று நம்புவோம்.