டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று இரவு 8 மணிக்கு இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. சில பலம் வாயந்த அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறின.
இன்று இந்தியா சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணி மொத்தம் இந்தச் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும்.
இந்த மூன்றுப் போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். ஆகையால், இந்திய அணியின் முக்கிய போட்டியாக இன்றைய போட்டி உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுடன் மோத வேண்டும்.
ஆஸ்திரேலியா அணி மிகவும் பலம்வாயந்த அணி. ஆகையால், அந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஒருவேளை அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டால் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான வெற்றிகளை வைத்துதான் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற முடியும். ஆகையால், இன்றைய வெற்றி இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை எட்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. அந்த போட்டிகளில் எல்லாம் இந்திய அணியின் இடது கை ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், கரீம் ஜன்னத், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் ஆகிய மூவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களிடம் இதுவரை 13 முறை ஆட்டம் இழந்துள்ளனர்.
எனவே, அவர்களை சமாளிக்க இடது கை ஆஃப் ஸ்பின்னர்களான ரவீந்தர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் நிச்சயம் அணியில் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், இடது கை லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவும் அணியில் இடம் பெறுவார் என்பதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
வெற்றிவிகிதத்தையும் இந்திய அணியின் திட்டத்தையும் வைத்து இந்திய அணி வென்றுவிடும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனெனில், 20 ஓவர் போட்டி என்பதால், இந்திய அணி சிறிது தடுமாறினாலே எதிரணிக்கு அது சாதகமாக அமைந்துவிடும்.