இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்களை எடுக்காதது ஏன் என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு போட்டிக்கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை. இந்தியா தனது சொந்த மண்ணில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைந்து மோசமாக விமர்சிக்கப்பட்டது.
இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் மோசமாக விமர்சிக்கப்பட்டனர். ரோஹித் ஷர்மா இதற்கு கேப்டன்தான் காரணம் என்று தன்னையே காரணம் காட்டியிருந்தார்.
இந்தநிலையில் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் முன்னணி வீரர்களுக்கு இந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரே கடைசி வாய்ப்பு என சொல்லப்படுகிறது. ஆனால், ரோஹித் ஷர்மா சொந்தக் காரணங்களால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதற்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்படவுள்ளார்.
அந்தவகையில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்- ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஏற்கனவே ஆல்ரவுண்டராக இருந்த இரண்டு முக்கிய வீரர்கள் எங்கே என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “உங்களுக்கு ஹர்திக் போன்ற ஒரு ஆல் ரவுண்டர்தான் தேவை. நிதிஷ் ரெட்டியை களம் இறக்குவதைவிட உங்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லை? ஷர்துல் தாக்கூர் இல்லையா? ஹார்திக் பாண்டியா இல்லையா? இரண்டு மூன்று வருடங்களாக தாகூரை உருவாக்கினோம். தற்போது அவர் எங்கே? அவர்களை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்காக மட்டும்தான் வைத்திருக்கிறோமா?
இப்படி திடீரென நிதிஷ் போன்ற வீரர்களை பந்து வீச அழைக்கிறீர்கள். சவுரவ் கங்குலி போன்று ஒன்றிரண்டு ஓவர்கள் நிதிஷ் ரெட்டியால் வீச முடியும். அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினால் அது அவருக்கு போனஸ் ஆகதான் இருக்கும். பந்து வீச்சில் கங்குலி இந்திய அணிக்கு செய்தது போன்றுதான் நிதிஷ் ரெட்டி செய்ய முடியும்.” என்று பேசினார்.