மீண்டு எழுந்த பென் ஸ்டோக்ஸ், துவண்டு விழுந்த ரோஹித் சர்மா!

Ind Vs Eng 1st Test Match.
Ind Vs Eng 1st Test Match.

இந்தியா நிச்சயம் தொடரை வெல்லும். அது 4-0 என்ற கணக்கிலா அல்லது 5-0 என்ற கணக்கிலா என்பதுதான் விஷயம். இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணியைத் தவிர வெறு எந்த அணியும் சவாலானது அல்ல. இங்கிலாந்துக்கு இது கடுமையான போட்டிதான் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் செளரவ் கங்குலி, இந்தியா- இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி, முதல் இன்னங்ஸில் இங்கிலாந்தைவிட 196 ரன்கள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் இருந்த்து. ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து மீண்டு எழுந்து இந்திய அணியை வெற்றிகொண்டது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பின்வாங்குவதும், பின்னர் மீண்டு எழுந்து வெற்றிபெறுவதும் சகஜம்தான். ஆனால், இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் அதிரடியாக ஆடி 196 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். ஹைதராபாதில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரைவிட இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 420 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு 241 ரன்களை இலக்காக வைத்தது.

ரோஹித் சர்மா, அணியை திறம்பட நடத்திச் செல்ல தவறிவிட்டார். ஆனால், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பின்னடைவை சவாலாக ஏற்று முதல் டெஸ்டில் வெற்றியை கைப்பற்றினார். கடந்த 2022 முதல் கேப்டனாக இருக்கும் ஸ்டோக்ஸ், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி, கடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி என தொடர்சாதனை படைத்துள்ளார்.

மறுபுறம் ரோஹித் சர்மா உலக கோப்பை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு டெஸ்டிலும், இந்தியாவில் ஆஸ்திரேலியா (இந்தூர்) மற்றும் இங்கிலாந்து (ஹைதராபாத்) அணிகளிடம் தோல்வி அடைந்தார். ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரண்டு கேப்டன்களைப் போல் ரோஹித் சுறுசுறுப்பாக செயல்படவில்லை என்றே தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
காந்திஜியை மையமாக வைத்து வந்த அசத்தல் திரைப்படங்கள் பற்றித் தெரியுமா?
Ind Vs Eng 1st Test Match.

பென் ஸ்டோக்ஸிடம் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்த போதிலும் அவர்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். மேலும் அவர்களுக்கு தகுந்தாற்போல் பீல்டிங்கில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆனால், ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் சுறுசுறுப்பு இல்லை. எல்லாம் தானாகவே நடக்கும் என்று எதிர்பார்த்தார். இங்கிலாந்து வீரர் ஒல்லி போப், சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாசி ஆடியதுடன், அவ்வப்போது குறுகிய ஓட்டமாக 1 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்.

இந்திய அணியின் ஸ்கோரைவிட 190 ரன்கள் குறைவாக இருந்த போதிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், அணியை சரியாக வழிநடத்திச் சென்றார். இதுவரை சரியாக விளையாடத பேட்ஸ்மென்கள்கூட திறமையை வெளிப்படுத்தி ஆடினர். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி எழுச்சி பெற்று முதல் டெஸ்டில் வெற்றியை கைப்பிடித்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில், கேப்டன் ரோஹித், பந்துவீச்சில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பீல்டிங்கும் எதிர்பார்த்த அளவு இல்லை. இங்கிலாந்து வீரர் ஒல்லி போப், பந்தை பவுண்டரிக்கு அனுப்பியதை வேடிக்கைபார்க்க முடிந்ததே தவிர ரோஹித்தால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள் போட்டித் தொடரை வெற்றிகரமாக சந்தித்த ரோஹித் சர்மாவால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை சரியான திசையில் நகர்த்திச் செல்ல முடியவில்லை. முதல் டெஸ்டில்தான் இந்தியா தோற்றுள்ளது. இன்னும் நான்கு டெஸ்டுகள் பாக்கி இருக்கின்றன என்று சமாதானம் சொன்னாலும், ரோஹித் இன்னும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பு. தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலில் ரோஹித் சர்மா இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com