இந்திய அணி தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததால், பிசிசிஐ ரோஹித் மற்றும் விராட் ஆகியோருக்கு ஒரு புது கண்டிஷன் போட்டிருக்கிறது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடைய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியே மீதமுள்ளன. ஆனால், நடந்துமுடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வட்டாரத்தினரும் ஏமாற்றமடைந்துவிட்டனர்.
தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி எனினும், இந்திய அணிக்கு அடுத்து விளையாடப்போகும் போட்டி மிகவும் முக்கியம். ஏனெனில், டெஸ்ட் தொடரையே இந்திய அணி இழந்துள்ளதால் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும், அப்படி இல்லை என்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். இந்திய அணி அடுத்து நடைபெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளும் உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் உள்ள லாட்ஸ் மைதானத்தில் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இதனால், இந்திய அணியில் அடுத்தப் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும். ஆகையால் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்குக்கூட கண்டிஷன் போடப்பட்டிருக்கிறது.
மும்பையில் நவம்பர் 1ம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெறும் பயிற்சி அமர்வுகளில் அனைத்து வீரர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அணி நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது.
இதற்கு முன்னர் இதுபோன்ற பயிற்சி முகாம்களில் சீனியர் வீரர்கள் பங்கேற்பது அவசியம் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு அதிகளவு சோர்வு ஏற்பட்டுவிடும் என்பதால் நேரடியாக வந்தால் போதும் என்ற விதி இருந்தது. ஆனால், இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பதால், விராட், ரோஹித், கே.எல்.ராகுல் உட்பட அனைவருமே பயிற்சி முகாமில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும், கலந்துக்கொள்ளவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.