இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று முடிந்துள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பியதால், இரண்டாவது இன்னிங்ஸில் எவ்வளவு முடிந்தும் வெற்றிபெற முடியவில்லை. இதனால், நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக செயல்பட்டார்.
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. நேற்று இந்திய அணி 16 ரன்கள் எடுத்தது. அதோடு முதல்நாள் ஆட்டம் முடிந்தது. இதனையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி விளையாடியது. கில் 30 ரன்களில் ஆட்டமிழந்தவுடன், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 156 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் விளையாடியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - லேதம் கூட்டணி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியது.
அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அட்டாக் செய்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்க்கப்பட்டது. கான்வே 17 ரன்கள் எடுத்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த வில் யங் சிறப்பாக ஆடிய நிலையில், அஸ்வினிடம் சிக்கி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரச்சின் ரவீந்திராவும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அனுபவ வீரர் மிட்சல் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் டாம் லேதம் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். 86 ரன்கள் எடுத்து பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட்டாகினார். இன்றைய ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணி தற்போது 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது.