இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து மகளிர் அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளது. முதலாவது போட்டி நேற்று அக்டோபர் 24, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் துவங்கியது. சில தினங்களுக்கு முன் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் நியூசி அணி இருந்தது. இந்தியா லீக் சுற்றிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறியதால் இறுக்கமான சூழலில் இருந்தது. ஒரு நாள் போட்டிக்கான டாசை இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய மகளிர் அணி சார்பில் ஷாபாலி வர்மாவும் ஸ்மிரிதி மந்தானாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஷாபாலி வர்மா துவக்கம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினார். சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பும் ஸ்மிருதி (5) இந்த மேட்ச்சிலும் 2வது ஓவரில் முதல் பந்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய யாஸ்திகா(37) சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடினார். ஷாபாலி 33 ரன்களுடன் வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய ஜெமிமா 35, தேஜல் 42, தீப்தி 41 ரன்களை எடுக்க, இந்திய அணி 200 ரன்களை கடந்து மதிப்பான ஸ்கோரை எட்டியது. அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 44.3 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை எடுத்தது. நியூசியின் அமெலியா கேர் 4 விக்கட்டுகளையும் ஜெஸ் கேர் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசி அணியின் துவக்க ஆ்டக்காரரான சுசி பேட்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். ஜார்ஜியா பிலிம்மர்(25) மற்றும் லாரன் டவுன்(26) ஜோடி நிதானமாக விளையாடினார்கள். 9 வது ஓவரில் ஜார்ஜியாவை அற்புதமாக கேட்ச் பிடித்து தீப்தி வெளியேற்றினார். சோபி டிவைனையும் 2 ரன்களில் தீப்தி ரன் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த புரூக் ஹாலிடே (39) மற்றும் மேடி கிரின்(31) ஜோடியினர் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினார்கள். அறிமுகப் போட்டியிலேயே சைமா தாக்கூர் தனது சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம் இந்திய அணியை வெற்றியின் பக்கம் திருப்பினார். புரூக் ஹாலிடே மற்றும் மேடி கிரீன் இருவரையும் சைமா வெளியேற்றினார்,அடுத்து ஜோடி சேர்ந்த இசி மற்றும் ஜெஸ் கேரை கேட்ச் பிடித்து சைமா வெளியேற்றினார்.
ஆல்ரவுண்டர் அமெலியா கேர் மட்டும் 25 ரன்கள் எடுத்து தாக்கு பிடிக்க,அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நியூசி அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 168 ரன்களுடன் தோற்றது. இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் ராதா யாதவ் 3 விக்கட்டுக்களையும், சைமா 2 விக்கட்டுக்களையும் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி 1-0 என்ற அளவில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ஆட்ட நாயகியாக தீப்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.