Ind Vs Pak: மைதானத்தில் நடந்த அந்த சம்பவம்… கவுதம் கம்பீருக்கு இதில் என்ன தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்..!
துபாயில் நடந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி அரசியல் காரணங்களால் பரபரப்பாக முடிந்தது. இந்தியாவின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன், அரசியல் காரணங்களால் போட்டி நடத்தலாமா வேண்டாமா என நீண்ட விவாதம் நடத்தினர். இறுதியில், போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், "எங்கள் அரசுக்கும், பிசிசிஐ-க்கும் இந்த போட்டியை விளையாட அனுமதி கொடுத்தது ஒரே நோக்கத்தில் தான். நாங்கள் இங்கு வந்து, அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தோம்" என்று தெரிவித்தார்.
சூர்யகுமார், வெற்றியின் அடையாளமாக கடைசி பந்தை அடித்துவிட்டு, தன் அணியின் வீரர் சிவம் துபேவுடன் களத்தை விட்டு வெளியேறினார். வழக்கம் போல், போட்டி முடிந்ததும் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்க அவர் செல்லவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க காத்திருந்தனர். ஆனால், இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிவிட்டு, உடைமாற்றும் அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டனர். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் ஏமாற்றத்துடன் நின்றனர்.
போட்டி முடிந்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், சூர்யகுமாரிடம் இது விளையாட்டு மனப்பான்மைக்கு எதிரான செயல் இல்லையா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "சில விஷயங்கள் விளையாட்டு மனப்பான்மையை விடவும் முக்கியமானவை.
நாங்கள் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்த வெற்றியை, 'ஆபரேஷன் சிந்தூர்'-இல் ஈடுபட்ட நமது துணிச்சலான ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
ஆனால், இது சூர்யகுமாரின் சொந்த முடிவு அல்ல என்றும், இது பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆலோசனை என்றும் 'டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்' என்ற ஊடகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் என்பது ஏப்ரல் 22 அன்று இந்திய காஷ்மீரில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல். இதற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சில இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றிலும் மீண்டும் மோத வாய்ப்புள்ளது. இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது, பாகிஸ்தான் அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றால், இரு அணிகளும் மீண்டும் மோதுவார்கள்.
இந்திய அணியின் இந்தச் செயல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிகாரப்பூர்வமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) புகார் அளித்துள்ளது. இந்திய அணியின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றும் PCB உறுதிப்படுத்தியுள்ளது.