தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் தனது முதல் டி20 போட்டியில் நேற்று களமிறங்கியது. முதலில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது. இதனால், இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஓபனர்களாக களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா ஏழு ரன்களில் அவுட்டான நிலையில், சஞ்சு சாம்சன் அந்த மைதானம் முழுவதும் பவுண்டரீஸ் மற்றும் சிக்ஸர்களால் நிரப்பினார்.
இதற்கு முன்னதாக சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் 47 பந்துகளில் 111 ரன்கள் அடித்த சதம் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 47 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என 100 ரன்கள் அடித்து தொடர்ச்சியான சதத்தை பதிவு செய்தார்.
இதற்கு முன் இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பரான தோனி மற்றும் ரிஷப் பண்ட் இதுவரை சர்வதேச போட்டிகளில் சதமடித்ததில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் அந்த சாதனையை முறியடித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதனையடுத்து இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 203 என்ற இலக்குடன் களமிறங்கியது.
தென்னாப்பிரிக்கா அணியில் அனைவருமே சொற்ப ரன்களுடன் வெளியேறினர். அதிகபட்ச ரன்களே ஜெரால்ட் அடித்த 23 ரன்கள்தான். தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களிலேயே 141 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி தனது முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.