ஹோப் சதம், கீமோ பால் 5 விக்கெட்! ஹைதராபாத்தில் சொதப்பிய இந்தியா -த்ரில்லர் தோல்வியின் பின்னணி!

247 ரன்கள் குவித்து அபாரம்; தொடரை 2-2 என சமன் செய்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது மே.இந்திய தீவுகள்!
WI won 4th T20
WI won 4th T20PTI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4 வது டி20 போட்டி, ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. டாசை வென்ற இந்திய அணி முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் கிடைத்தது அந்த அணிக்கு பெரிய அதிர்ஷ்டமாக மாறியது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷாய் ஹோப் மீண்டும் ஒரு முறை தனது காட்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் பந்துவீச்சை சிதைத்த ஹோப் 9 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசினார் , 50 பந்துகளில் 102 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இந்த டி20 தொடரில் ஹோப் அடித்துள்ள 2 சதமாகும் , மேலும் இந்திய சுற்றுப்பயணத்தில் அவர் அடித்துள்ள 4 வது சர்வதேச சதம் ஆகும். ஒருபுறம் ஜீவல் ஆன்ட்ரூ 21 ரன்களும் , ஹெட்மேயர் 33 ரன்களும் , ரோவ்மன் பாவல் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹோப்புடன் ஜோடி சேர்ந்து ரூதர்போர்ட் 49 ரன்களை அதிரடியாக குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் இறுதியில் மே.இந்திய தீவுகள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு பிரம்மாண்டமாக 247 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணியின் பவுலர்களில் பிரின்ஸ் யாதவ் மட்டுமே குறைவான ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை சஞ்சு சாம்சன் கொடுத்தார். 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து 56 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் மிகவும் மெதுவாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 29 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், நமன் தீர் ஆகியோர் பொறுப்பற்ற முறையாடி அவுட்டாகி வெளியேற , இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. அதிலும் நமன் தீர் டக் அவுட் ஆகி வெளியேறினார். திலக் வர்மாவும் நிதிஷ் குமார் ரெட்டியும் இணைந்து அணியை வேகமாக மீட்க முயற்சி செய்தனர். திலக் 43 ரன்களும் நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதன் பின்னர் ஆட்டம் முழுவதுமாக மே.இந்திய அணிகள் வசம் சென்றது.

Hope and keemo paul
Hope and keemo paulBCCI

இறுதி விக்கட்டுக்கு களமாடிய அர்ஷ்தீப் சிங் கையில் , ஷமர் ஜோசப்பின் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால், அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதனால் ஆட்டம் நின்று போனது. 19.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 223 ரன்களை மட்டுமே குவித்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் தோல்விக்கு மே.இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. கீமோ பால் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி சாம்சன் , இஷான் கிஷன் , நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமானார். ஆயினும் ஆட்ட நாயகன் விருது சாதமடித்த ஹோப்பிற்கு கிடைத்தது.

இந்திய அணி தனது பேட்டிங்கில் கோட்டை விட்டது மட்டுமின்றி , பந்துவீச்சிலும் சோடை போனது. தேர்வுக் குழுவின் அதிரடி முடிவுகள் அணியை பலவீனமாக்குகிறதே தவிர , அதை பலப்படுத்த ஒன்றும் செய்யவில்லை. பந்துவீச்சில் பும்ராவை விட்டால் அடுத்தது யார்? என்று தெரியவில்லை. அணியின் பீல்டிங் மிகவும் மோசமான ஒன்றாக உள்ளது,சிறப்பாக விளையாடும் ஆல்ரவுண்டர்களையும் தேர்வு செய்வதில்லை.

இந்த தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமமாக இருப்பதால் , அடுத்து நடைபெற இறுதிப் போட்டியே யாருக்கு கோப்பை? என்பதை தீர்மானிக்க உள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இறுதி போட்டி அக்டோபர் 17, சனிக்கிழமை அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com