இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, தொடக்கம் முதல் விக்கெட்டை பறிகொடுத்து 12.3 ஓவர்களுக்கு 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி 101 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை இந்திய அணியிடம் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் (4 ரன்கள்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12 ரன்கள்), அபிஷேக் சர்மா (17 ரன்கள்), மற்றும் திலக் வர்மா (26 ரன்கள்) ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அக்ஷர் பட்டேல் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
கடினமான சூழலில், ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி, 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜிதேஷ் சர்மாவும் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், சிபம்லா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. துவக்க வீரர் குயின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார். மார்க்ரம் (14), ஸ்டப்ஸ் (14), பிரேவிஸ் (22) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். டேவிட் மில்லர், பெரிரீரா உட்பட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி வெறும் 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்குச் சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் அபாரமாகப் பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.