
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. தொடரின் 4 வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்டுகிராபோர்ட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ் வாலும் கே.எல்.ராகுலும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். 10 பவுண்டரிகளை அடித்த ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் ஓடி ஓடி 48 ரன்கள் வரை சேர்த்திருந்தார். அடுத்து வந்த சுதர்சன் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சோதித்தார். 151 பந்துகளை சந்தித்த இவர் 7 பவுண்டரிகளை அடித்து 61 ரன்கள் குவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 264/4 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் இந்திய அணிக்கு சிறப்பாக இல்லை. ரிஷப் பன்ட் காயம் காரணமாக வெளியேற ஒரு கட்டத்தில் இந்திய அணி தத்தளிப்பதை பார்த்து, காயத்தினை பொருட்படுத்தாது மீண்டும் களமிறங்கி 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆள் இல்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்ப ஆட்டம் முடிவுக்கு வந்தது. 358 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரவ்லியும் பென் டக்கட்டும் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடிகள் ஒரு நாள் ஆட்டத்தை போல பந்துகளை வீணாக்காமல் வேகமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர். இந்த இணை 166 ரன்கள் குவித்தது. ஜாக் கிரவ்லி 84 ரன்களும் டக்கட் 94 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கி அணி 225/2 ரன்களை குவித்தது. களத்தில் ஆலி போப் மற்றும் ஜோ ரூட் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியின் வேகம் குறையாமல் இருந்தது. அவர்களை வெளியேற்றுவது இந்திய அணிக்கு கடினமான செயலாக இருந்தது. ஆலி போப் 71 ரன்களும், ஜோ ரூட் 150 ரன்களும் குவிக்க இங்கிலாந்து வலுவான நிலைக்கு வந்தது. இந்த டெஸ்டில் தனது 38 வது சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார். இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 544/7 ரன்களை குவித்து 186 ரன்கள் முன்னிலை பெற்றுது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் லியாம் டாசன் 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நான்காவது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி சோர்வடைய வில்லை. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அதிக முன்னிலைக்கு வழி வகுத்தார். இறுதியில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து இங்கிலாந்து 669 ஸ்கோரை குவித்தது. இதன் மூலம் 311 ரன்கள் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து. இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நான்காவது நாளில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் ஜெய்ஸ்வாலும் சுதர்சனும் துவக்கத்திலேயே டக் அவுட்டாகி இந்திய அணியை இக்கட்டில் தள்ளினர். கே.எல்.ராகுலும் சுப்மன் கில்லும் இணைந்து 4 வது நாள் முடிவில் 174 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். ஆயினும் அன்றைய நாளில் இந்திய அணி முன்னிலைப் பெறவில்லை.
ஐந்தாவது நாளில் கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அணியை மீட்டார். இந்த தொடரில் சுப்மன் கில் அடிக்கும் 4வது சதம் இது. இதன் மூலம் 148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக தொடரில் 4 சதங்களை விளாசிய முதல் கேப்டன் என்ற பெருமையும் பெற்றார். கில்லிற்கு பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் (101) ரவீந்திர ஜடேஜாவும் (107) இங்கிலாந்து அணியின் வெற்றியை தகர்த்தனர்.
இறுதி நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கட் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. இந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்தும் 6 விக்கட்டுகளை வீழ்த்தியும் ஆல் ரவுண்டராக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 31 ஆம் தேதி தொடங்கும்.