

இங்கிலாந்தில் 5 போட்டிகளைக் கொண்ட, டி20 இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 வது டி20 போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி இங்கிலாந்தை பேட் செய்யுமாறு அழைத்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பில் சால்ட்(70) மற்றும் ஜோஸ் பட்லர்(36) ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தினை துவங்கி 5 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி சிறப்பாக அணியை வழிநடத்தினர்.
இந்த ஜோடி 5 ஓவரில் 43 என்ற வலிமையான ஸ்கோரை எட்ட உதவியது. அதன் பிறகு வந்தவர்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காவிட்டாலும் , ரன் வேகத்தினை குறைக்காமல் பார்த்துக் கொண்டனர். 16.2 ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடிய பில் சால்ட் 70 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதற்குள் வெற்றிக்கு தேவையான ஸ்கோரை எட்ட உதவி இருந்தார். சாம் குர்ரான் 41 ரன்களை அடித்து அணிக்கு தன்னுடைய பங்களிப்பை வழங்க 20 ஓவர்களில் 201/7 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை இங்கிலாந்து எட்டி இருந்தது.
202 ரன்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் , களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் மிகப்பெரிய நம்பிக்கையை இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை 3 வது ஓவரிலேயே தகர்ந்து போனது. முதலில் களம் இறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக 10 ரன்களை குவிக்க , மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி(13) 2 சிக்சர்களை அடித்து இங்கிலாந்து பவுலர்களை கதி கலங்க வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் அவுட்டாகி இந்திய ரசிகர்களையும் கதி கலங்க வைத்துவிட்டார்.
அபிஷேக் ஷர்மா மற்றும் வைபவை மட்டுமே நம்பி இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியாக இருந்தது. "எதுக்கு இந்த மேட்சை பார்த்தோம்?" என்று இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கடுப்பைக் கொட்டி தீர்த்தனர். போட்டியில் அதிகபட்சமாக வைபவும் இஷானும் தலா 13 ரன்களை அடித்திருந்தனர்.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மிக அவசரமாக 5 ரன்களில் வெளியேறி விட்டார். 2 , 3 , 4 , 5 என்று இந்திய பேட்ஸ்மென்கள் தங்களது திறமையை இங்கிலாந்தில் இருந்து உலகிற்கு காட்டினர். இதில் இந்திய அணி பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் , இந்தப் போட்டியில் எந்த வீரரும் டக் அவுட் ஆகவில்லை என்பது தான். 11.4 ஓவரில் இந்திய அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களை மட்டுமே எடுத்து, 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான படுதோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களான ஜோஷ் டாங்க் 4 விக்கட்டுகளையும் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி அற்புதமாக செயல்பட்டனர்.
இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் நாட்டின் முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் இந்திய அணியை மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றன. தொடர்ச்சியாக 4 வது போட்டியிலும் தோல்வி அடைந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரையும் மிக கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இன்னும் 2 போட்டிகள் இந்த தொடரில் எஞ்சியுள்ளன. இங்கிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தொடரில் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.