ஜென் Z-களை கவரும் ஜப்பானிய எவர்க்ரீன் கிளாசிக் தொடர் 'கொக்சென்'' (Gokusen)..!

கொக்சென்
கொக்சென்Source:IMDB
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

ஆசிய தொடர்கள் என்றாலே இன்று பலருக்கும் கொரிய நாடகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் முன்பாகவே உலகளவில் பெரும் அலையை ஏற்படுத்திய பல உன்னதமான ஜப்பானிய நாடக தொடர்கள் உண்டு. அந்த வரிசையில், பள்ளிச் சூழலையும் நகைச்சுவையையும் அதிரடி ஆக்‌ஷனுடன் கலந்து, இன்றுவரை உலகெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு எவர்கிரீன் ஜப்பானியத் தொடர் தான் 'கொக்சென்' (Gokusen). 'கோசுயேகோ மோரிமோட்டோ' எழுதிய புகழ்பெற்ற ஜப்பானிய சித்திரக்கதையை (Manga) அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தத் தொடர், உலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கிய தொடராகும்.

விசித்திரமான கதைக்களம்:

இந்த கதையின் நாயகி 'குமிகோ யமகுச்சி' (Kumiko Yamaguchi). சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, டோக்கியோவின் மிகப்பெரிய மாஃபியா கும்பலான 'யகசா' (Yakuza) அமைப்பின் தலைவரான தனது தாத்தாவால் வளர்க்கப்படுகிறாள். பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்களால் அடிக்கடி கிண்டல் செய்யப்பட்டு, அடியும் உதையும் வாங்குகிறாள் நாயகி. ஒருநாள் காயங்களோடு அழுதுகொண்டே வீடு திரும்பும் அவளைப் பார்த்து “யாராவது அடிக்க வந்தால் திருப்பி அடி! அழாதே. உனக்கு நீதான் உதவி” என்று அவளுக்குள் தைரியத்தை விதைக்கிறார் தாத்தா. அவளுக்குத் தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொடுக்கத் தொடங்குகிறார்.அந்த மாஃபியா சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு குமிகோ தான். ஆனால், அவளுக்கோ ஒரு பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பதே லட்சியம்.

கொக்சென்
கொக்சென்Source:netflix

அவளது ஆசைப்படியே 'ஷிரோகின் கக்குயென்' என்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை கிடைக்கிறது. ஆனால், அவளுக்கு ஒதுக்கப்படும் '3-டி' (Class 3D) வகுப்பறையோ, படிக்காத, ஊர் சுற்றும், வன்முறையில் ஈடுபடும் ரவுடி மாணவர்களின் கூடாரமாக இருக்கிறது. எந்த ஆசிரியராலும் கட்டுப்படுத்த முடியாமல் அட்டகாசம் செய்யும் அந்த வகுப்பு மாணவர்களை, குமிகோ எவ்வாறு கையாள்கிறாள்? தனது குடும்பப் பின்னணியை மறைத்துக்கொண்டு, அந்த மாணவர்களுக்கு அவள் எப்படி நல்வழி காட்டுகிறாள்? என்பதே விறுவிறுப்பும் நகைச்சுவையும் நிறைந்த கதைக்களம்.

நாயகியின் அசத்தல் நடிப்பு:

இத்தொடரின் பிரதான பலமே ஆசிரியை குமிகோவாக நடித்த 'யுகியே நகமா' (Yukie Nakama) என்பவரின் அசாத்திய நடிப்புதான். கண்ணாடி அணிந்து, இரட்டை சடை போட்டு , ட்ராக் சூட் அணிந்து வரும் பள்ளிக்கு வருவாள். மாணவர்கள் தவறு செய்யும்போது அல்லது ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது காட்டும் அதிரடி யாக்குசா சண்டைக் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். மாணவர்கள் அவளுடைய பெயரை சுருக்கி அன்போடு வைத்த பெயர் தான் 'யன்குமி'

அதேபோல், மாணவர்களின் தலைவனாக வரும் 'ஷின் சவாடா' பாத்திரத்தில் பிரபல ஜப்பானிய நட்சத்திரம் 'ஜுன் மத்சுமோட்டோ' (Jun Matsumoto) மற்றும் அவரது நண்பர்களாக வரும் 'குமாய்', 'உச்சி' போன்ற மாணவர்களின் நடிப்பு மிக யதார்த்தமாக இருக்கிறது. பள்ளி முதல்வர் மற்றும் பிற ஆசிரியர்களால் வெறுக்கப்படும் மாணவர்கள், ஆரம்பத்தில் யன்குமியை அவமதிக்கிறார்கள். ஆனால் அவளது உண்மையான பாசத்தையும் வீரத்தையும் கண்டு, அவளுக்காக எதையும் செய்யத் துணியும் இடங்கள் நெகிழ்ச்சியானவை.

மனதை தொடும் கிளாசிக் தொடர்:

வெறும் சண்டை மற்றும் நகைச்சுவைத் தொடராக மட்டும் இல்லாமல், 'கொக்சென்' மிக ஆழமான சில சமூகக் கருத்துக்களைப் பேசுகிறது. பொதுவாகச் சமூகத்தால் "தண்டச்சோறு", "ரவுடிகள்", "உருப்படாதவர்கள்" என்று முத்திரை குத்தப்படும் மாணவர்களின் பின்னால் இருக்கும் குடும்பச் சூழ்நிலையையும் அவர்களின் நியாயங்களையும் இந்தத் தொடர் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாடப் புத்தகங்களை மட்டும் நடத்துவது ஆசிரியரின் கடமையல்ல; வாழ்க்கையின் விழுமியங்களையும், நம்பிக்கையையும், சுயமரியாதையையும் கற்றுத் தருபவரே உண்மையான ஆசிரியை என்பதை 'யன்குமி' பாத்திரம் நமக்கு உணர்த்துகிறது. மூன்று சீசன்கள் மற்றும் ஒரு முழுநீளத் திரைப்படம் எனப் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற இந்த ஜப்பானிய கிளாசிக் தொடர், இன்றும் பார்ப்பவர்களின் மனதைத் தொடும் ஆற்றல் கொண்டது என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
கரகாட்டக்காரன்: 35 லட்சத்தில் உருவான அதிசயம்! எப்படி இமாலய வெற்றி பெற்றது?
கொக்சென்
logo
Kalki Online
kalkionline.com