கவுகாத்தியில் , நவ 22 அன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று பின்னடைவு கொண்ட, மோசமான தோல்வியை சந்தித்துள்ளது .ஏற்கனவே முதல் டெஸ்டில் தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோற்றதால் , இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவின் கையை விட்டு முழுமையாக சென்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியது. தென் ஆப்பிரிக்க அணியினர் சராசரியாக ரன்களை குவித்த நிலையில் ,சேனுரான் முத்துசாமி 109 ரன்களையும், மிகவும் அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் 93 ரன்களையும் குவித்தனர். முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 489 ஸ்கோரை எட்டியது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துரத்திய இந்தியா அணியில் ஜெய்ஸ்வால் மட்டும் 58 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினார். மற்ற பேட்ஸ்மென்கள் ஒற்றை இலக்கத்தில் சரிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 201 ஸ்கோரை எட்டியது. தென் ஆப்பிரிக்க அணியின் பாதி ஸ்கோரைக் கூட இந்தியா எட்டாததால் பாலோ - ஆன் வாய்ப்பை எதிர்பார்த்தது .ஆயினும் தென் ஆப்பிரிக்க தனது இரண்டாவது பேட்டிங் இன்னிங்சை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தென் ஆப்பிரிக்க அணி. டிரிட்டன் ஸ்டப்ஸ் 94 ரன்களையும் , டோனி டி சோர்சி 49 ரன்களும் எடுக்க , அணியின் ஸ்கோர் 260 ஐ தொட்டது. அத்துடன் 4 விக்கெட்டுகள் மீதம் இருக்கும் நிலையில் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து களமிறங்கி 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணியில் சொல்லிக் கொள்ளும் எவரும் விளையாடவில்லை. செவ்வாய்க்கிழமை 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 27-2 என்ற பரிதாப நிலையில் இருந்தது. 5 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டாக சரிந்து விழுந்தது.ஜடேஜா மட்டும் 54 ரன்களை கடக்க , அவருக்கு எந்த ஒத்துழைப்பும் மற்ற வீரர்களிடம் கிடைக்க வில்லை. இறுதியில் 140 ஸ்கோருக்குள் இந்திய ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. ஜடேஜாவிற்கு அடுத்த இடத்தில் உதிரிகள் மூலம் 16 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது , அதன் மோசமான நிலையை காட்டுகிறது.
இந்த போட்டியில் சிறப்பாக விலையாடிதற்காக தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய அந்த அணியின் சிமோன் ஜான்சன் தொடர் நாயகன் விருது பெற்றார்.
இரண்டாவது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து மோசமான சாதனையை இந்தியா படைத்துவிட்டது . இதற்கு முன் 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது தான் ,சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. 2000-01க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்று சாதனைப் படைத்துள்ளது.
சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 400 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்க அணி பெற்றுள்ளது. 12 ஆண்டுகள் மற்றும் 18 தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வியடையாமல் இருந்த இந்திய அணி , சொந்த மண்ணில் நடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் 5 இல் தோல்விகளை சந்தித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்திய அணி சமீப காலமாக சரிவுகளை சந்தித்துள்ளது.