பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா: வென்றது 6: நழுவியது 7!

India in Olympics
India in Olympics
Published on

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்தியா 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளி என 6 பதக்கங்களுடன் 71வது இடத்தைப் பிடித்தது. 6 பதக்கங்கள் கிடைத்தாலும், 7 பதக்கங்கள் நூலிழையில் நழுவியதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்தியா வென்றவை குறித்தும், கைநழுவிய பதக்கங்கள் குறித்தும் விவரிக்கிறது இந்தப் பதிவு.

இந்தியா வென்ற பதக்கங்கள்:

துப்பாக்கி சுடுதல்:

1. தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மனு பாக்கர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமும் இதுவே.

2. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகிய இருவரும் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

3. 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தனிநபர் பிரிவில் ஸ்வப்னில் குசாலே மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

4. ஹாக்கி: பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நன்றாக விளையாடத் தொடங்கியுள்ள இந்திய அணி ஹாக்கியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது.

5. ஈட்டி எரிதல்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா இம்முறை ஈட்டி எரிதலில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

6. மல்யுத்தம்: 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் பிரிவிவ் போட்டியிட்ட அமன் ஷெராவத் தனது முதல் ஒலிம்பிக்கிலேயே வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இந்தியாவிற்கு நழுவிய 7 பதக்கங்கள்:

1. மல்யுத்தத்தில் 51 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், வெறும் 100கிராம் கூடுதல் எடையின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவுக்கு எளிதாக கிடைக்க வேண்டிய ஒரு பதக்கம் கை நழுவிப் போனது. இருப்பினும் இதனை எதிர்த்து போகத் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.

2. பளு தூக்குதல் போட்டியில் ஒரே 1 கிலோ எடை குறைவாகத் தூக்கியதால் நான்காம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மீராபாய் சானு.

3 & 4. துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் அர்ஜூன் மற்றும் 25மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் ஆகிய இருவரும் நான்காம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வெல்லத் தவறினர்.

5. வில்வித்தைப் போட்டியில் அன்கிதா மற்றும் திராஜ் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியைத் தழுவினர்.

6. பேட்மின்டனில் சிறப்பாக விளையாடி வந்த லக்சயா சென், வெண்கலத்துக்கான போட்டியில் முன்னணியில் இருந்தும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார்.

இதையும் படியுங்கள்:
எம்.எஸ்.தோனிக்கும் ஸ்வப்னில் குசாலேவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை?
India in Olympics

7. துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் அனன்ஜீத் சிங் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நான்காவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை இழந்தனர்.

இந்தியா 6 பதக்கங்களை பெற்றிருக்கும் நிலையில், நழுவிய 7 பதக்கங்கள் கைக்கு எட்டியிருந்தால் நிச்சயமாக இம்முறை இரட்டை இலக்கை எட்டியிருக்கும். மேலும் பல இந்திய வீரர்கள் சில போட்டிகளில் காலிறுதி வரை வந்து தோல்வியைத் தழுவினர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com