ஒரு விளையாட்டு வீரராக நாம் சாதிக்க வேண்டுமெனில், பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. இதுவரையில் சாதித்தவர்கள் கூட பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தேசத்தின் கொடியை பறக்க விடுவது என்பது சாதாரண ஒன்றல்ல. அவ்வகையில் உலக நாடுகளின் பல வீரர்களுடன் போராடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவின் ஒலிம்பிக் பதக்க கனவு நனவானது எப்படி என்பதை முதலில் பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ராதா நகரியைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் குசாலே. 29 வயதான இவர், புனேவில் உள்ள இரயில் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். இரயில்வேயின் பணிபுரிந்து கொண்டே நாசிக்கில் உள்ள கிரிடா பிரபோதினி என்ற பயிற்சி மையத்தில் குசாலே துப்பாக்கி சுடுதல் பயிற்சியைக் கற்றுக் கொண்டார். தனது இடைவிடாத முயற்சியினால் வெகு விரைவிலேயே துப்பாக்கி சுடுதலில் தலைசிறந்து விளங்கினார். இதன் விளைவாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
துப்பாக்கி சுடுவதில் முதலில் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற இவர், கடந்த சில ஆண்டுகளாக சீனியர் பிரிவில் இந்தியாவிற்காக பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற குசாலே, 50மீ ரைபிள் 3 நிலைகள் துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றுகளில் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் 3 நிலைகள் என்பது, ஒரு வீரர் படுத்துக் கொண்டு சுடுதல், ஒரு முட்டியில் அமர்ந்து சுடுதல் மற்றும் எழுந்து நின்று சுடுதல் ஆகிய மூன்று நிலைகளைக் குறிக்கும்.
இறுதிப் போட்டியில் தனது அபாரத் திறமையால் 451.4 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்த ஸ்வப்னில் குசாலே, வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது பதக்கம் இது. பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என நினைத்த குசாலேவின் கனவு இன்று நனவாகியுள்ளது.
இவருக்கு மிகவும் பிடித்த வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஆவார். தோனியைப் போலவே, குசாலேவும் 2015 ஆம் ஆண்டு இரயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து இருக்கிறார் என்பது மற்றுமொரு சுவாரசியத்தை அளிக்கிறது. அன்று தோனி இந்திய அணிக்கு உலகக்கோப்பைகளை வாங்கிக் குவித்தார். இன்று ஸ்வப்னில் குசாலே இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.
50மீ ரைபிள் 3 நிலைகள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்வப்னில் குசாலே பெற்றுள்ளார். இந்திய அணிக்கு இந்த ஒலிம்பிக்கில் கிடைத்த மூன்று வெண்கல பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளது. பதக்கம் வென்ற குசாலேவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.