இந்தியா - ஆஸ்திரேலியா ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி - இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா முன்னிலை!

Ind Vs Aus
Ind Vs Aus
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில், ஆலன் பார்ட்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் மோத உள்ளன. நேற்று டிச.5 வியாழக்கிழமை அன்று துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் பிரியா புனியா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் மிகவும் மந்தமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்கள். நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்மிருதி 2.5 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து மேகன் ஷட் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் (19) மற்றும் கேப்டன் ஹர்மன் (17) ஆகியோர் சிறிது நேரம் தாக்குபிடித்து இரட்டை இலக்க ரன்களை எட்டினர். ஜெமிமா நேற்றைய போட்டியின் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களை (23) எட்டினார். ஜெமிமாவை , கிம் கார்ட் கிளின் போல்ட் ஆக்கி வெளியேற்றியதும் இந்திய கிரிக்கெட் அணி மொத்தமாக சரிந்தது.

இந்திய அணியில் நான்கு பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்ட முடிந்தது. பிரியா மிஸ்ரா, ரேணுகா சிங் ஆகியோர் எந்த ரன்களும் எடுக்காமல் மோசமாக வெளியேறினர். 34.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் 6.2 ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அலனா கிங், கிம் கார்ட், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

எளிய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ரன்களை விளாசியது. போப் லிட்ச் பீல்ட் மற்றும் ஜார்ஜியா ஜோடி விக்கெட் இழப்பின்றி 48 ரன்களை குவித்தது. ஜார்ஜியா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்திருந்தார். ஜார்ஜியாவுக்கு மறுபுறம் களமிறங்கிய எந்த வீரங்கனையும் நிலைத்து நிற்கவில்லை. ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டு தான் இருந்தன.

ஆயினும் அவர்களின் துவக்க ஆட்டக்காரர்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை முன்பே குவித்து விட்டதால் அவர்கள் கவலையின்றி வெளியேறி கொண்டிருந்தார்கள். இறுதியில் 16.2 ஓவரில் வெற்றியை ஆஸ்திரேலியா அணி அடைந்தது. இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 3 விக்கட்டுக்களையும், பிரியா மிஸ்ரா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகியாக சிறப்பாக பந்து வீசிய மேகன் ஷட் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
"10 ஆண்டுகளாக விராட் கோலி பட்டர் சிக்கன் சாப்பிடவில்லை" - அனுஷ்கா சர்மா! அச்சச்சோ, என்ன ஆச்சோ?
Ind Vs Aus

இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்த போதிலும் அவர்கள் துவக்க ஜோடியின் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். முதல் இரண்டு விக்கெட்டுகளை அவர்கள் ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்கலாம். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் யாரும் பார்மில் இல்லாததும் தோல்விக்கு காரணம். ஏற்கனவே சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தொடரை இந்திய அணி இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் முடிவின் படி தொடரில் 1- 0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரில் முன்னிலை பெற்றது. தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆலன் பார்டர் மைதானத்தில் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com