

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து , இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தொடங்குவதிலும் நடைபெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன. இதன் காரணமாக 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வில் யங் 6 ரன்களும் டிம் செஃப்ரட் டக் அவுட் ஆகி ஆரம்ப கட்டத்திலேயே அணியின் நம்பிக்கையை சிதைத்தனர். நிக்கோலஸ் 11 ரன்களிலேயே வெளியேறினார். ஒரு புறம் டேரில் மிச்செல் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். அவரது ஆட்டமும் கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன் விளையாடுவதைப் போல பந்துகளை வீணாக்கி கொண்டிருந்தார். 104 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 55 ரன்களை மட்டுமே அடித்தார். மறுபுறம் அவருக்கு துணையாக எந்த ஒரு ஆட்டக்காரரும் களத்தில் நீண்ட நேரம் நிற்கவில்லை.
குறிப்பிடத் தகுந்த வகையில் கிளென் பிலிப்ஸ் டக் அவுட் ஆனது நியூசி அணியின் மொத்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. மிச்செல் சான்ட்னர் 31 ரன்கள் எடுத்து சிறிது நேரம் களத்தில் நின்றிருந்தார். ஆயினும் 41 ஓவர்களில் நியூசி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் 4 விக்கெட்டுகளையும் , காம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்த எளிய இலக்கை விரட்டத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே நியூசி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில் தொடக்கத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து விராட் கோலியும் 7 ரன்களில் வெளியேறினார். சிறிது நேரம் நிலைத்து நின்ற ரோஹித் ஷர்மாவும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் போராடி 30 ரன்களை மட்டுமே குவித்தார் , ஒருபுறம் இந்திய அணியின் விக்கெட்டுகள் மிக வேகமாகவே விழுந்து கொண்டிருந்தது. இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 113 ரன்கள் எடுத்த போது மழையின் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது கே. எல்.ராகுலும் (26) ஆக்யூப் நபியும் (1) களத்தில் இருந்தனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது , மீண்டும் போட்டி தொடங்குவதற்கு காலநிலை ஒத்துழைக்காததால் , டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா மிகக் குறைந்த ஓவர்களில் வெற்றிக்கு அருகாமையில் சென்றிருந்தது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக குர்னூர் பிரார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் இந்தியா வென்றிருந்தாலும் இறுதிக் கட்ட நேரத்தில் தொடர் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. இன்னும் 22 ரன்கள் எடுக்க 3 விக்கெட்டுகளை தக்க வைத்திருப்பது அவசியம். ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி நியூசியை விட அதிக ரன்ரேட்டுடன் விளையாடியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆயினும் வருண பகவான் கருணை இருந்ததை மறக்க முடியாது.