

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. தொடரின் இறுதிப் போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செட்டான் பார்க்கில் நடைபெற்றது. ஏற்கனவே இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருந்தாலும் 4 வது போட்டியில் அதன் மோசமான தோல்வியினால் , தேர்வுக் குழு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசி அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மோசமான தொடக்கத்தினை கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 1 ரன்னிலும் சஞ்சு சாம்சன் 4 ரன்னிலும் அவுட் ஆகி அணியை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றனர். ஆயினும் இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இணைந்து அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். இவர்களின் அதிரடியால் அணி 100 ரன்களை கடந்தது. இஷான் 32 பந்துகளை எதிர் கொண்டு 5 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளை அடித்து 62 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் தன் பங்கிற்கு 23 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார்.
மிடில் ஆர்டரில் திலக் வர்மா 6 ரன்கள் மட்டுமே எடுக்க , அணி மீண்டும் தத்தளிக்க ஆரம்பித்தது. நமன் தீர் 33 ரன்களும் , நிதிஷ் குமார் 22 ரன்களும் அணிக்கு பங்களித்தனர் . 20 ஓவர்களில் இந்திய அணி திணறி 191/8 ரன்களை குவித்திருந்தது. நியூசி அணியின் ஆடம் மில்னே முக்கியமான 3 பேட்ஸ்மென்கள் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசி அணி தொடக்கத்தில் இருந்தே தனது வேகம் குறையாமல் விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பர்ட் நிதானமாக விளையாடி அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்களித்தார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 93 ரன்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பினை எளிதில் தவற விட்டார். ஆலன் மற்றும் மிச்செல் ஆகியோர் குறைவான ரன்களை எடுத்தாலும் , அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் முந்தைய போட்டியை போலவே இந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் நியூசி அணி 18 ஓவர்கள் 195 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணி இன்னும் 30-40 ரன்களை குவித்து இருந்தால் நியூசி அணியை வீழ்த்துவது எளிதாக இருந்திருக்கும். தொடக்க ஆட்டக் காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பியதால் அணியின் ஸ்கோர் குறைந்து போனது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் எந்த ஒரு தாக்கத்தையும் நியூசி அணிக்கு ஏற்படுத்த வில்லை.
இந்த போட்டியின் வெற்றியினால் நியூசி அணி கவுரவமான முறையில் , சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு காரணமான ஆடம் மில்னேவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதும் நியூசி அணியின் பிலிப்ஸ்சிற்கு வழங்கப்பட்டது.