இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய வீரர்கள் உள்பட பல வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் கூட வேண்டாம் எங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் தான் இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் மாற்றுமாறு ஐசிசியிடம் பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் இதுகுறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் ஐசிசி தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து ஷாகித் அப்ரிடி, சல்மான் பட் மற்றும் யூனுஸ் கான் போன்ற வீரர்கள் ஏற்கனவே தங்கள் கருத்தை கூறியிருந்தனர். இந்நிலையில், எங்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புத் தர வேண்டாம்; குறைந்தபட்சம் எங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுங்கள் என்று இந்திய அணிக்கு கம்ரான் அக்மல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்தியா பாகிஸ்தான் இடையே அவ்வப்போது இருதரப்புத் தொடரை நடத்தினால், இருநாட்டு வீரர்களுக்கு நல்ல புரிதல் உண்டாகும். பிசிசிஐ விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். ஒருவேளை இருதரப்புத் தொடர் நடைபெற்றால், ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், நாங்கள் வேண்டுவது ஐபிஎல் அல்ல. எங்களிடம் பிஎஸ்எல் (Pakistan Premier League) தொடர் இருக்கிறது. எப்போதும் போல இருதரப்புத் தொடர்கள் நடக்க வேண்டும். மேலும், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வேண்டும்.
இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் ஒன்றிணைக்க இருதரப்புத் தொடர்கள் அவசியம் தேவை. 2004, 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு சென்று விளையாடிய பாகிஸ்தான் அணியில் நான் இருந்ததை என் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அதுபோல் இந்திய அணியும் இங்கு வந்து விளையாட வேண்டும். நாங்களும் அங்கு விளையாடத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் இரதரப்புத் தொடர் நடந்தால் நிச்சயமாக அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்புத் தொடரை நடத்த ஆஸ்திரேலியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி பலனளிக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.