

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இரு அணிகளுமே தங்களது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டாம் நிலை ஆட்டக்காரரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் இந்தப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றதால் அவர், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த சுப்மன்கில், கடந்த புதன்கிழமை ஆமதாபாத் சென்று பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். 99 சதவீதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறுவார் என்று ரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருவேளை சுப்மன்கில் அணியில் இடம்பெற்றால், இஷான் கிஷன் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.
இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மன்கில் விளையாடுவார் என்பதைத் தவிர இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகுர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். ஒருவேளை ஆமதாபாத் ஆடுகளத்துக்கு மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டால் அஸ்வின் இடம்பெறக்கூடும். எனினும் இதுபற்றி இப்போது ஏதும் கூறமுடியாது என்று ரோகித் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
கேப்டன் பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. எனினும் ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சாளர் ஹஸன் அலி அதிக ரன்கள் கொடுத்ததால் அவருக்கு பதிலாக முகமது வாஸிம் ஜுனியர் அணியில் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன்கில்/இஷான்கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
பாகிஸ்தான் அணி: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷக்கீல், இப்திகார் அகமது, ஷாதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, ஹஸன் அலி/முகமது வாஸிம், ஹாரிஸ் ரவூப்.