

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தும், மே.இந்திய அணி அதை விரட்டி பெற்றது. அதனால், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி சமநிலையில் இருந்தது. இதனால் , நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய 3 வது டி20 போட்டி அதிக கவனம் பெற்றது. மே.இந்திய தீவுகள் அணி எளிதில் வீழ்த்த முடியும் அணியாக இருந்தாலும் , இந்திய அணியின் குறைபாடுகளால் , அவர்களின் திடீர் வெற்றி தடுக்க முடியாததாக உள்ளது.
3 வது போட்டியில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணி தனது முந்தைய பார்முலாவை நினைத்து பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சஞ்சு சாம்சன் இரண்டாவது ஓவரிலே 3 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அதன் பின்னர் அவரின் வேகம் குறைந்து போய் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் இஷான் கிஷன் 37 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர்.மே. இந்திய அணி பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக இந்திய அணியின் விக்கெட்டுகளை உருவிக் கொண்டே இருந்தனர். இந்திய அணியின் இறுதி விக்கெட்டை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் சாய்த்தனர். ஆயினும் இந்திய அணி 223 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஷமர் ஸ்ப்ரிங்கர் , ஷமர் ஜோசப் , சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய மே. இ அணியின் ஷாய் ஹோப்பை 5 ரன்களில் வெளியேற்றி இந்திய அணி சற்று நிம்மதி அடைந்தது. ஆயினும் கமில் பூரன்(42) மற்றும் ஹெட்மேயர்(43) இணைந்து இந்திய அணிக்கு தண்ணீர் காட்டினார்கள். இவர்களின் விக்கெட்டை எடுத்தாலும் அடுத்து வந்தவர்கள் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்கள். ருதர்போர்ட் தனியாக ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார். மறுபுறம் ஷமர் ஸ்ப்ரிங்கர்(35) 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து இந்திய அணியை கதிகலங்க வைத்தார். இறுதி ஓவர்களில் ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டியது. 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரிகளை விளாசினாலும் 209 ரன்கள் மட்டுமே மே இந்திய தீவுகளால் எட்ட முடிந்தது.
இந்திய அணி இந்தத் தொடரில் 2 வது வெற்றிப் பெற்று தொடரில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த முறை இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள் என்று குறிப்பிடலாம். குறிப்பாக அர்ஷ்திப் சிங் இந்த போட்டியில் அதிக ரன்களைக் குவிக்க கூடிய ஹோப், பூரன் , ரூதர்போர்ட் ஆகியோரின் விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் , ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப் பட்டது.
இந்தப் போட்டியில் பனிப் பொழிவு குறைவாக இருந்ததால் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆயினும் இந்திய அணி ஒரு நிலையான பந்து வீச்சுக் குழுவை கொண்டிருக்காமல் சோதனைப் அடிப்படையில் அவர்களை வைத்திருப்பதால் அடிக்கடி அணி தடுமாறுகிறது. இந்த தொடர் இரு அணிகளும் சரிசமமாக போராடுவதால் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகள் மோதும் அடுத்த டி 20 போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.