405 ரன்கள் குவித்தும் திணறல்! சுப்மன் கில்லின் அசுர பலத்தால் மே.இ.தீவுகளை துவம்சம் செய்த இந்தியா!

கவுகாத்தியில் இந்திய அணியின் வரலாற்றுச் சாதனை சேஸிங்! கில்லின் இரட்டை சதம்!
ind won
Subhman Gill image credit:Hindustan Times
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் , இரண்டாவது போட்டியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை செய்துள்ளது. இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும், இரண்டாவது போட்டியில் அதன் ஆட்டம் மிகக் சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது.

கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசை வென்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை மே.இந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் களமிறங்கிய ஜான் கேம்பல் ஆரம்பம் முதலே மிகவும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். 68 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் சதத்தினை(101) கடந்தார்.

மறுபுறம் கேம்பலுக்கு நீடித்த ஒத்துழைப்பு கொடுத்த ஷாய் ஹோப்பும் சதம்(104) கடந்தார். அவருடன் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த அமிர் ஜுங்காவும் தன் பங்கிற்கு ஒரு சதத்தினை(114) அடித்து,இந்திய அணி பந்துவீச்சாளர்களை துவைத்தெடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. விரட்டி வெல்வதற்கு கடினமான இந்த இலக்கை இந்திய அணி எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறது? என்று சந்தேகம் கூட இருந்தது.

இந்திய அணி பேட்டை தூக்கியதும் அந்த சந்தேகம் தகர்ந்து போனது. ரோஹித் ஷர்மாவும் சுப்மன் கில்லும் இணைந்து மைதானத்தை அதகளப் படுத்தினர். 26 ஓவர் வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் எதிரணி கலங்கிப் போய் நின்றது. இந்த இணை 255 ரன்களை பார்ட்னர்ஷிபில் சேர்த்தது. இவர்களின் ஆட்டம் பழைய சச்சின் , கங்குலி ஆட்டத்தை பார்த்தது போல் இருந்தது.

ind won wi
ind west indcricinfo

ரோஹித் ஷர்மா 75 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசி 101 ரன்களை எடுத்தார். சுப்மன் கில் 133 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை அடித்து துவைத்து 223 என்ற மிகப்பெரிய தனிநபர் ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் இரண்டாவது இரட்டை சதமாகும். 117 பந்துகளில் அதிவேகமாக இரட்டை சதமடித்து இஷான் கிஷனின் சாதனையை முறியடித்து கில் முதல் இடத்தில் இருக்கிறார்.

வீராட் கோலி 29 ரன்களில் அவுட்டானதால் அடுத்து வந்து ருதுராஜ் கெய்க்வாட் மிக நிதானமாக விளையாடி கில்லிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 43.3 ஓவரில் இந்திய அணி 406 என்ற பிரம்மாண்ட இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இரட்டை சதமடித்த சுப்மன் கில்லிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் பற்றி சிறப்பாக பேசப்பட்டாலும் , மேற்கிந்திய தீவுகள் அணியை 400 ரன்களை கடக்க விடும் அளவிற்கு, இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக இருந்ததாக கருத்துக்கள் கூறப்படுகின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டி நியூ சண்டிகரில் உள்ள பிசிஏ சர்வதேச மைதானத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com