

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசியன் விளையாட்டு போட்டிகளில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மோதியது. இன்று நிஷினில் உள்ள கரோகி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில், இந்திய அணி டாசை வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இன்றைய போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.
சமீபத்திய காலமாக இந்திய அணியிடம் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி, இம்முறை ஆசியன் விளையாட்டு போட்டி என்பதால், வெல்வதை முக்கியமாக கருதி கடுமையாக போராடியது. இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வைபவ் சூரியவன்ஷி மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 2 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடியை தொடங்கிய வைபவ் 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதே நேரம் அபிஷேக் ஷர்மா நிலைத்து நின்று வழக்கம்போல் தனது அதிரடியை தொடங்கியிருந்தார்.
அதிவேகமாக ரன்களை குவித்த அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்து 61 ரன்களை குவித்தார். மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் 21 , இஷான் கிஷன் 20 என்று குறைவான ரன்களே எடுத்த நிலையில் , திலக் வர்மா தனது அதிரடியை காட்டி 22 பந்துகளில் 51 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்திருந்தது.
212 என்ற பெரிய இலக்கை விரட்ட தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சதா பர்ஹான் 10 , மாஸ் சதக்கத் 23 ஆகியோர் மிகவும் தடுமாற்றமான துவக்கத்தையே கொடுத்தனர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 39 ஸ்கோர் அடிக்கும் போது 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ஹாசன் நவாஸ் தனது அதிரடியின் மூலம் பாகிஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் கொண்டு சென்றார். நவாஸ் விளையாட ஆரம்பித்ததும் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து கொண்டே வந்தது.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வென்று விடுமோ? என்று இந்திய ரசிகர்கள் மிகவும் சோர்ந்து காணப்பட்டனர். இறுதி ஓவர்கள் வரை ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. வெற்றி எந்த அணிக்கு கட்டும் என்று ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ரண்களை கட்டுப்படுத்தியது. 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து 95 ரன்களை குவித்த நவாசை, சிவம் துபே பந்தில் கேட்ச் பிடித்து சாம்சன் வெளியேற்றினார். இறுதிப் பந்தில் அவர் ஆட்டம் இழந்தார்.
இறுதிவரை மிகக் கடுமையாக போராடிய பாகிஸ்தான் அணியினால் 192 ரன்களை மட்டுமே போராடி குவிக்க முடிந்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகத்தான ஒரு வெற்றியை ஆசியன் போட்டியில் பெற்றது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தது. ஏற்கனவே இந்திய மகளிர் அணியும் ஆசியன் விளையாட்டுப் போட்டியில் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆசியக் கண்டத்தின் கிரிக்கெட் போட்டிகளில் அசைக்க முடியாத ஜாம்பவான் என்ற பெயரினை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.