

இந்தியா- இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, ரேணுகா சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக அறிமுக வீராங்கனையாக மதுரையைச் சேர்ந்த ஜி.கமலினி மற்றும் சினே ராணா சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மாவும், கமலினியும் அடியெடுத்து வைத்தனர். ஷபாலி வர்மா 5 ரன்னில் அவுட்டாகி வெளியாற, அவரை தொடர்ந்து புதுமுக தமிழக வீராங்கனை கமலினியும் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் ஹர்லீன் தியோல் 13 ரன்னிலும்,விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 5 ரன்னிலும், தீப்தி ஷர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால் அதிரடியாக விளையாடி அணியை தூக்கிநிறுத்திய ஹர்மன்பிரீத் கவுர் 68 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்துமு, அமன்ஜோத் கவுர் 21 ரன்னில் அவுட்டானார். கடைசியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது.
இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹரி, ராஷ்மிகா செவந்தி, சமாரி அட்டப்பட்டு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடித்தொடங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 2 ரன்னில் நடையை கட்ட, 2-வது விக்கெட்டுக்கு ஹாசினி பெரேராவும், இமிஷா துலானியும் கைகோர்த்து இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டனர். துலானி 50 ரன்களிலும், ஹாசினி பெரேரா 65 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேற அதனை தொடர்ந்து ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.
20 ஓவர்களில் இலங்கை அணியால் 7 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் பந்து வீசிய தீப்தி ஷர்மா, அருந்ததி, சினே ராணா, வைஷ்ணவி ஷர்மா, ஸ்ரீசரனி, அமன்ஜோத் கவுர் என அனைவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
முதல் 4 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி இலங்கையை ‘ஒயிட்வாஷ்’ ஆக்கியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் சொந்தமாக்குவது இது 3-வது முறையாகும்.