

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் இரு ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த இலங்கையை 130 ரன்னுக்குள் மடக்கிய இந்தியா அந்த இலக்கை 15 ஓவருக்கு முன்பாகவே எட்டிப்பிடித்து அசத்தியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த மைதானத்தில் பெண்கள் சர்வதேச போட்டி நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதனை தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறத் தொடங்கியது. ரேணுகா சிங் மற்றும் தீப்தி சர்மாவின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹசினி பெரேரா 25 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், தீப்தி சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் குதித்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 1 ரன்களும், ஜெமிமா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்தனர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஷபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.
இலங்கை அணி வீசிய அனைத்து பந்துகளையும் பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ஷபாலி வர்மா அரை சதமடித்து 42 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது.