
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றி இருந்தது. தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஜூலை 22 , நேற்று துர்காமில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் 3 வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல்முறையாக டாசை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் துவக்க வீரர்களான பிரித்திகா ராவலும் ஸ்மிருதி மந்தனாவும் ஆட்டத்தை துவக்கினர். முதல் இருபது ஓவர்கள் வரை நிதானமாக ஆடிய இந்திய அணி பின்னர் வேகமெடுக்க ஆரம்பித்தது. ஸ்மிருதி 45 ரன்கள், ஹர்லீன் தியோல் 45 ரன்கள் எடுத்து வெளியேற , கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் (102 ) அதிரடியாக விளையாடி சதமடித்தார். தனது 50 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஜெமிமா 50 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 318/5 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 38 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
பெரிய இலக்கை நோக்கி துரத்தலை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் துவக்கம் சரியாக இல்லை எமி ஜோன்ஸ் மற்றும் டாஸ்மின் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆனால், அடுத்து வந்த எம்மா லாம்ப் 68 ரன்களையும் நாட் ஸ்கிவர் 98 ரன்களையும் குவித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அடுத்து வந்தவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி வெற்றிக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒரு புறம் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை இந்திய அணியின் கிரந்தி கவுட் சாய்த்துக் கொண்டிருந்தார். 49.5 ஓவரில் இங்கிலாந்து அணி தனது இறுதி விக்கட்டையும் இழந்ததால் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்த போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதித்தது. கிரந்தி 6 விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகியாகவும் தொடரின் நாயகியாகவும் இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் தொடர் கோப்பையும் கைப்பற்றி சாதனை செய்துள்ளார். ஒரே நேரத்தில் மூன்று கோப்பைகளை பெறும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார். இந்திய மகளிர் அணி தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்து நாடு திரும்புகிறது.