ஒலிம்பிக் தொடர் முடிந்து, இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். இந்த நிலையில் கவாஸ்கர், இந்தியா பதக்கம் வெல்லாது, ஆனால், அதற்கு சாக்கு போக்கு மட்டும் கூறும் என்று கிண்டலாகப் பேசியுள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தாண்டு இந்தியா வெற்றிபெற்ற பதக்கங்களைவிட கைநழுவிய பதக்கங்களே அதிகம். இது இந்திய மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக பேட்மிண்டன் தொடரில் இந்தியா ஒரு பதக்கம்கூட வெற்றிபெறவில்லை. 2008 பீஜிங் ஒலிம்பிக் தொடரில் இந்தியா பேட்மிண்டனில் பதக்கம் வெல்லாமல் இருந்தது. அதன்பின் 2012, 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் தொடர்களில் ஒரு பதக்கமாவது கிடைத்து வந்தது.
இதுகுறித்து முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே "இனியும் இந்திய விளையாட்டு வீரர்கள், இந்திய அரசையும் விளையாட்டு துறையையும் குறை கூறிக்கொண்டு இருக்க முடியாது. அவர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறார்கள். இனி தோல்விகளுக்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்." என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் "ஒவ்வொரு முறையும் சாக்கு போக்கு சொல்வதில் தான் நமது நாடு தங்கப் பதக்கம் வெல்லும். பிரகாஷ் படுகோனேவின் விமர்சனம் பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பதற்கானது அல்ல.
அவர் ஒட்டுமொத்தமாக என்ன நடக்கிறது என சொல்லி இருக்கிறார். ஒரு வீரர் அவரது செயல்பாட்டுக்கு பொறுப்பேற்கவில்லை என்றால், யார் அதற்கு பொறுப்பு ஏற்பார்கள்? பிரகாஷ் படுகோனே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
வீரர்கள் எப்போதும் சாக்குபோக்கு சொல்வதையும், எங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று சொல்வதையும் தான் செய்கிறார்கள். பிரகாஷ் படுகோனே இதை ஒரு அறையில் வைத்து தனிமையில் சொல்லி இருக்கலாம். ஆனால், பொதுவெளியில் வைத்து சொல்லப்படும் விஷயங்களுக்கு தான் தாக்கம் அதிகம்." என்று பேசியிருக்கிறார்.