2025 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் செஸ் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவதாக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் நடைபெறும் நகரம் பற்றி இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை.
2025 ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு நடத்தும் மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் போட்டிகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 46 நாடுகளை சார்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் வைஷாலி ரமேஷ்பாபு , ஹரிகா ,கோனேரி ஹம்பி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை மிகவும் சிறப்பானதாக இருக்கும். காரணம் இப்போது சதுரங்க போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இந்தியா உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டியில் 206 வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் தோல்வியடையும் வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த உலகக் கோப்பையில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள், 2026 ஆம் ஆண்டு உலககோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள். இது உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியாளரை தீர்மானிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் இளம் செஸ் விளையாட்டு வீரர்கள் சிறப்பான முறையில் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுகின்றனர். 18 வயதில் இளைய உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரக்ஞானந்தா ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக செஸ் உலகில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லசனை சமீபத்தில் தொடர்ச்சியாக தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசியும் இந்தியாவிற்கு நம்பிக்கை தருகிறார்கள்.
2024 ஆம் ஆண்டில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, தேஷ்முக் மற்றும் அகர்வால் ஆகியோர் நான்கு தனிப்பட்ட தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளனர். 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் , வளரும் இந்திய செஸ் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக உள்ளார். இந்தியா தொடர்ந்து செஸ் போட்டிகளில் சாதிக்க விஸ்வநாதனின் ஊக்கமும் ஒரு காரணமாக உள்ளது. இவர் தற்போது சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.