

இந்தியர்கள் கிரிக்கெட் தொடர்பான பல கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளனர். சில சுவாரஸ்யமான தொகுப்பு இந்த பதிவில்...
1964 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 21 முறை 'சிக்ஸ் பால்' மெய்டன் ஓவர் செய்திருக்கிறார் ரமேஷ் சந்திரிகங்காரம் நட்கர்னி. இது ஒர் இந்திய கிரிக்கெட் கின்னஸ் சாதனை.
1967 ம் ஆண்டு அக்டோபர் 29-31 ம் தேதிகளில் மும்பையில் நடைபெற்ற துலிப் டிராபி இறுதி ஆட்டத்தின்போது 10 மணி நேரம் 22 நிமிடங்களில் 200 ரன்கள் எடுத்தார் மன்சூர் அலிகான் எனப்படும் பட்டோடி நவாப். மிக மிக மெதுவான வேகத்தில் ரன் எடுத்தது என கின்னஸ் புத்தகத்தில் பதிவான முதல் இந்திய ரிக்கார்ட் இதுதான்.
கபில் தேவ் தன் 24 வயதில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஒராண்டு 107 நாட்களில் 1000 ரன்களும், 100 விக்கெட்களையும் எடுத்து தன்னுடைய 25 வது டெஸ்ட் மாட்ச்சிற்குள் எடுத்து இரட்டை சாதனை படைத்தது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். புருடான்சியல் உலகக் கோப்பை 1983 ம் ஆண்டு நடைபெற்றபோது தனிப்பட்ட முறையில் அதிகபட்சமாக 175 ரன்கள் ஆட்டமிழக்காமல் ஸ்கோர் செய்தவர் கபில் தேவ். இதுவும் ஒரு கின்னஸ் சாதனை.
1962 ம் ஆண்டு மேற்கத்திய அணிக்கு எதிராக இந்தியா விளையாடியபோது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாப் பட்டோடி. அப்போது அவருக்கு அவருக்கு வயது 21 வருடங்கள் 77 நாட்கள். இத்தனை சிறிய வயதில் கேப்டனாக தலைமை தாங்கியவர். உலகில் வேறு எவரும் இல்லை இது ஒரு கின்னஸ் சாதனை.
ஆரம்ப காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் சார்பாக விளையாடிவர் சி.கே நாயுடு ( 1895- 1967) . இவர் நாக்பூரில் 1963 ம் ஆண்டு நவம்பர் 4 தேதி நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது அவருக்கு வயது 68. இது ஒரு கின்னஸ் சாதனை.
1971 மார்ச் 19 முதல் 1983 பிப்ரவரி 4 வரை இந்திய அணி சார்பில் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டவர் விஸ்வநாத். அவர் தொடர்ச்சியாக ஆடியுள்ள டெஸ்ட் மேட்ச்களின் எண்ணிக்கை 91. இது ஒரு கின்னஸ் சாதனை.
1982 ம் ஆண்டு ஜனவரி 1 -6 தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டியின்போது வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 3,94,000. இதுவும் ஒரு கின்னஸ் சாதனை.
முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த தனது பேட்டை ஏலத்தில் 83 லட்சம் ரூபாய்க்கு ($1,00,000-க்கும் மேல்) விற்று, உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட கிரிக்கெட் பேட் என்ற உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.
மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி: 2013-14 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'ஈநாடு கிரிக்கெட் சேம்பியன் கோப்பை' (Eenadu Cricket Champion Cup) போட்டியில் 16,215 பேர் பங்கேற்று, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
2022-ஆம் ஆண்டு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் (IPL) இறுதிப் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI). உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சியை Largest Cricket Jersey) மைதானத்தில் விரித்து காட்சிப்படுத்தி கின்னஸ் உலக சாதனையை படைத்தது.
இந்த ஜெர்சி 66 மீட்டர் (216 அடி) நீளமும், 42 மீட்டர் (137 அடி) அகலமும் கொண்டது. ஐபிஎல் (IPL) தொடரின் 15-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஜெர்சியில் '15' என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த ஜெர்சியில் பிசிசிஐ, ஐபிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 10 அணிகளின் சின்னங்களும் இடம்பெற்றிருந்தன.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம் 1974ல் திறக்கப்பட்டது. கடந்த 1975, ஜன. 23-29ல் வான்கடே மைதானத்தில் முதல் சர்வதேச போட்டி நடந்தது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டெஸ்டில் மோதின. இங்கு 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை (50 ஓவர்) வென்றது.' இதன் 50வது ஆண்டு விழா, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.
ஜூன் 23,2025 அன்று வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளை பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM.' என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் 'புல் ஸ்டாப்' வைக்க மட்டும் 44 பந்து பயன்படுத்தப்பட்டது.
சமீபத்திய இந்திய கின்னஸ் சாதனை, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (அனைத்து வடிவங்களையும் சேர்த்து) 582 சிக்ஸர்களை விளாசி கின்னஸ் உலக சாதனை படைத்ததுதான்.
இந்த பதிவை வாசிப்பதன் மூலம், உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய தேசமும் நம் வீரர்களும் எவ்வளவு ஆழமான ஆதிக்கத்தை செலுத்தியுள்ளனர் என்பதை அரிய வரலாற்றுத் தரவுகளுடன் நீங்கள் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம். இது விளையாட்டு அரட்டைகளில் உங்களை ஒரு கிரிக்கெட் நிபுணராக மாற்றுவதோடு, இந்திய கிரிக்கெட்டின் பெருமிதப் பக்கங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பெருமகிழ்ச்சி அடைய உதவும்.