

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி , நேற்று துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. ஆசியக் கோப்பையின் எல்லா இறுதிப் போட்டியிலும் பங்கேற்ற வலிமையான அணி, என்ற மகத்தான சாதனையை இந்திய மகளிர் அணி தன் வசம் வைத்துள்ளது. நேற்றைய இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி இணைந்து 129 ரன்கள் வரை விளாசி எடுத்தனர். 39 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்ட்ரிகளை விளாசிய ஷாபாலி வர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாபாலி அவுட் ஆகிய சில நிமிடங்களிலேயே ஸ்மிருதியும் 59 ரன்களில் வெளியேறினார். 39 பந்துகளை எதிர் கொண்ட அவர் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்ட்ரிகளை விளாசி இருந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்மன்பிரித் கவுர்(14) மற்றும் ரிச்சா கோஷ் (17) ஆகியோர் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க , 20 ஓவர்கள் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எட்டியது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கடுமையான நெருக்கடியை கொடுத்தனர். இலங்கை அணியும் துவக்க ஆட்டக்காரரான இமிஷா துலானி 4 ரன்களில் வெளியேற , சாமரி அட்டப்ப்பட்டு 36 ரன்களை குவித்து அந்த அணியின் சார்பில் அதிக ரன் குவித்த வீராங்கனை ஆனார்.
விஷ்மி குணரத்னே 20 ரன்களும் , நிலாக்ஷி டி சில்வா 22 ரன்களும் எடுக்க , மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் தடுமாறி 111 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது , அத்துடன் இறுதி விக்கட்டையும் அந்த அணி இழந்து விட்டது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனைப் படைத்தது.
இதுவரை நடைபெற்ற 10 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் , 8 வது முறையாக கோப்பையை கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. மற்ற எந்த ஆசிய அணியும் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணி விட்டதில்லை. இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்த இந்திய மகளிர் அணி கோப்பையை வாங்காமல் தங்கள் அறைக்கு திரும்பி விட்டனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும் , பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணியினர் கோப்பையை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இலங்கை அணியை சேர்ந்த வீரர்கள் இரண்டாம் இடம் பெற்றதற்கு பரிசுகளை அவரிடம் பெற்றுக் கொண்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே மைதானத்தில் ஆசியக் கோப்பைப் இறுதிப் போட்டியில் வென்ற இந்திய ஆடவர் அணியும், நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தனர். அப்போது நக்வீ கோப்பையை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி, தீவிரவாதத்திற்கு எதிரான தனது வலிமையான நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்தியுள்ளது.