இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார்!

Sunil Chhetri
Sunil Chhetri

- மதுவந்தி

ஒரு பக்கம் உலக T20 கிரிக்கெட் போட்டிகள் களைக்கட்டத் துவங்கியுள்ள நிலைமையில் அமைதியாக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி.

தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரும், உலகில் நான்காவது அதிக கோல்கள் அடித்த வீரருமான முப்பத்தொன்பது வயதான சேத்ரி, குவைத்திற்கு எதிரான நேற்றைய போட்டியுடன் தனது ரசிகர்களுக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு கண்ணீர் மல்க ஓய்வினை அறிவித்தார். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அவருக்கு கார்ட் ஆப் ஹானர் Guard of Honour மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் கால்பந்தாட்ட துறைக்கு இவரின் பங்கு மிகப் பெரியது. தொடர்ந்து பத்தொன்பது வருடங்களாக விளையாடிய இவர் 151 போட்டிகளில் 94 கோல்கள் அடித்துள்ளார். இது ரொனால்டோ (128), அலி டேய் (108), மெஸ்ஸி (106) ஆகியோருக்கு அடுத்ததாகும். அகில இந்தியக் கால்பந்தாட்ட வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை அதிக முறை (7) பெற்ற வீரராவார்.

இந்திய அரசாங்கம் இவருக்கு 2011இல் அர்ஜுனா விருதும், 2019இல் இந்தியாவின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருதும், 2021இல் விளையாட்டுத் துறைக்கான மிக உயரிய விருதுமான ராஜிவ் காந்தி கேள் ரத்னா விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சிஎஸ்கே திரும்புகிறாரா அஸ்வின்?
Sunil Chhetri

சேத்ரியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியக் கால்பந்தாட்ட வாரியம், FIFA எனும் உலக கால்பந்தாட்ட வாரியம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், பிரீமியர் லீக் இந்தியா, முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஸ்குவின்ஹா, குரோஷியா அணி தலைவரும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான லூகா மோட்ரிக் உள்ளிட்ட பல பிரபலங்களும் அவரை புகழ்ந்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் "கோல் அடிப்பது சுலபம் இல்லை, அதிலும் சர்வதேச போட்டிகளில் 94 கோல்கள் அடிப்பது என்பது அசாதாரண விஷயம். உங்களின் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடந்துமுடிந்த குவைத் உடனான போட்டியில் இந்திய அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. போட்டி டிராவில் முடிந்தாலும் சேத்ரி இல்லாமல் இந்திய அணியின் நிலைமை சிறிது கவலை தருவதாகவே உள்ளது. அடுத்தடுத்த உலகக்கோப்பை தகுதி சுற்றிற்கு இந்திய அணியின் நிலைமையும் அதனைத் தொடர்ந்த எதிர்காலமும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் அவருக்குப் பதில் யார் என்பது இப்பொழுது கேள்விக் குறியாகவே உள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் உள்ளூர் போட்டிகளில் சேத்ரி விளையாடுவாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com